முலாயம்சிங்கை கொல்ல முயன்ற காங்கிரசுடன் அகிலேஷ் கூட்டணி - உ.பி. பிரசாரத்தில் மோடி கடும் தாக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
முலாயம்சிங்கை கொல்ல முயன்ற காங்கிரசுடன் அகிலேஷ் கூட்டணி  உ.பி. பிரசாரத்தில் மோடி கடும் தாக்கு

கன்னோஜ்- முலாயம் சிங்கை கொலை செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சியுடன், அகிலேஷ் யாதவ் கூட்டணி  வைத்திருப்பது வெட்கக்கேடு என்று பிரதமர் நரேந்திர மோடி தாக்கியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது.

முதல் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்நிலையில், கன்னோஜ் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பாஜ பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:
இந்த மாநிலத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு,  சமாஜ்வாடியும், காங்கிரசும் ஒன்றையொன்று சரமாரியாக குற்றம்சாட்டிக் கொண்டிருந்தன. ஆனால், சினிமாவில் வருவது போல் எதிரிகள் திடீரென நண்பர்களாகி  கூட்டணி சேர்ந்துள்ளனர்.

சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி, மக்களின் கனவுகளைத் தகர்த்து விடும். கடந்த 1984ம் ஆண்டில் முலாயம் சிங்கை காங்கிரசார் கொலை செய்ய முயன்றனர்.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முலாயம்சிங் போராட்டம் நடத்திய போது  காங்கிரஸ் கட்சியினர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில்  காயத்துடன் முலாயம் தப்பினார்.

இதை முலாயம் சிங்கின் மகனான அகிலேஷ் மறந்து விட்டாரா? தனது தந்தையை கொலை செய்ய முயன்ற கட்சியுடன்  ஒருவர் தேர்தலில் கூட்டணி அமைப்பது எவ்வளவு வெட்கக்கேடு? இதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அகிலேஷ் யாதவுக்கு அரசியலில் அனுபவம் கிடையாது.

இதனால் காங்கிரஸ்  கட்சியைப் பற்றி அவருக்குத் தெரியவில்லை. முலாயம் சிங்குக்கு அந்த கட்சியைப் பற்றி நன்கு தெரியும்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ்  கட்சியுடன் ரகசியமாகவும், மறுபக்கம் சமாஜ்வாடியுடனும் கூட்டணி அமைத்துள்ளது. அதனால்தான்,  ராகுல் காந்தியுடன் சேர்ந்து அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்த போது  பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியை அகிலேஷ் மட்டும் விமர்சித்தார்.

ஆனால், மாயாவதியை ராகுல்காந்தி விமர்சிக்காமல் மழுப்பலாக பதிலளித்தார். இந்த தேர்தலில் பாஜ தனது சொந்த கால்களில்  போட்டியிடுகிறது.

மற்ற கட்சிகளை தோல்வியடையச் செய்யும்.

.

மூலக்கதை