நள்ளிரவு 12 மணி வரை சிறையில் தூங்க முடியாமல் தவித்த சசிகலா, இளவரசி - காலையில் வாக்கிங்; டிபனுக்கு புளியோதரை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நள்ளிரவு 12 மணி வரை சிறையில் தூங்க முடியாமல் தவித்த சசிகலா, இளவரசி  காலையில் வாக்கிங்; டிபனுக்கு புளியோதரை

பெங்களூரு- பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நேற்றிரவு தூக்கம் வராததால், நள்ளிரவு 12 மணி வரை இளவரசியுடன் பேசிக் கொண்டிருந்தார். இன்று காலை வாக்கிங், குளியல் என வழக்கமான பணிகளை அவர்கள் மேற்கொண்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை எதிரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தனி நீதிமன்றத்தில் நீதிபதி அஷ்வத் நாராயண் முன்பு சரணடைந்தனர். சட்ட விதிமுறைகளின் படி மேற்கொள்ள வேண்டிய பணிகள் முடித்தபின் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசியை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்களும், சுதாகரனை மற்ற போலீசாரும் சிறைக்கு அழைத்து சென்றனர்.
சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரை பெண்கள் பிரிவில் உள்ள கன்விக்டர் செல்-2 அறையில் நேற்று மாலை அடைத்தனர்.

அவர்களுக்கு பாய், கம்பளி போர்வை, தலையணை வழங்கப்பட்டது. சாப்பிட தட்டு, டம்பர், சொம்பு, சாம்பார் கிண்ணம் ஆகியவையும் வழங்கப்பட்டது.

பெண் சிறை கைதிகளுக்கான கதர் வெள்ளை சேலையும் வழங்கப்பட்டது.

நேற்று இரவு 8. 15 மணிக்கு இருவரும் டிபன் சாப்பிட்டதாக சிறை பெண் அதிகாரி தெரிவித்தார். சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் தூக்கம் வராமல் நள்ளிரவு 12 மணி வரை பேசிக் கொண்டிருந்ததாகவும், அதன்பின் தூங்கச் சென்றதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுதாகரன் நேற்றிரவு சிறையில் உணவு எதுவும் எடுத்து கொள்ளாமல் அமைதியாக தூங்கச் சென்றதாக தெரியவருகிறது. சசிகலா வாக்கிங் : இன்று காலை 6 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்த சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறை வளாகத்தில் 30 நிமடம் வாக்கிங் சென்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரிகள், பெண் போலீசாருடன் சில நிமிடங்கள் பேசினர். சக பெண் கைதிகளிடம் சிரித்து பேசியதுடன், ஏற்கனவே 2014ம் ஆண்டில் 23 நாட்கள் சிறையில் இருந்தபோது பழகிய பெண் கைதிகளிடம் நலம் விசாரித்து பேசினர்.

பின்னர், சசிகலா, இளவரசி ஆகியோர் சிறைக்கு சென்று காலைக்கடன்களை முடித்தனர். அவர்கள் குளியல் முடித்து வந்த பின்பு, காலை உணவாக அவர்களுக்கு புளியோதரை வழங்கப்பட்டது.



சிறை மெனுவில் உள்ளபடி இன்று காலை அனைத்து கைதிகளுக்கும் புளியோதரை வழங்கப்பட்டிருக்கிறது. வி. ஐ. பி.

சிறை கிடைக்குமா ? : சிறையில் தங்களுக்கு விஐபி அறை ஒதுக்கீடு செய்யும்படி சசிகலா, இளவரசி ஆகியோர் நேற்று சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதை கேட்ட நீதிபதி, ‘உங்களுக்கு அதற்கான தகுதி இருந்தால், வருமான வரி செலுத்திய ஆவணங்களை சிறை அதிகாரிகளிடம் கொடுத்து பெற்று கொள்ளலாம்’ என்று கூறியிருந்தார்.

அதையேற்று இன்று இருவருக்கும் விஐபி அறைகள் ஒதுக்கீடு செய்வதற்கான ஆவணங்களை உறவினர்கள் கொடுப்பார்கள் என்றும், அதைத் தொடர்ந்து விஐபி செல்லுக்கு அவர்கள் மாறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு டி. வி. , பேன், கட்டில், மேஜை, நாற்காலி உள்பட கூடுதல் வசதிகள் கிடைக்கும்.

விஐபி அறை ஒதுக்கீடு பற்றி இன்று மாலை தெரியும்.

.

மூலக்கதை