18 கொலை செய்த பெண் பக்கத்து அறையிலா? பாதுகாப்பு கருதி இரவில் வேறு அறைக்கு மாற்றம் - சிறை அதிகாரிகள் திடீர் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
18 கொலை செய்த பெண் பக்கத்து அறையிலா? பாதுகாப்பு கருதி இரவில் வேறு அறைக்கு மாற்றம்  சிறை அதிகாரிகள் திடீர் முடிவு

பெங்களூர்- சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலாவும், இளவரசியும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று அவர்கள் சிறைக்குள் சென்றவுடன் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன் பிறகு அவர்கள் இருவரையும் அங்கிருந்து பெண் சிறை அதிகாரிகள் தனி சிறையில் அடைத்தனர். இரவு ஏழு மணிவரை அவர்கள் அந்த செல்லிலேயே இருந்தனர்.

அதன் பிறகு சிறை அதிகாரிகள் அவர்களை வேறு ஒரு செல்லுக்கு மாற்றம் செய்தனர். இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘சசிகலாவும் இளவரசியும் முதலில் அடைக்கப்பட்டிருந்த செல்லின் பக்கத்து அறையில், 18 கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற பெண் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விஷயம் சசிகலா மற்றும் இளவரசிக்குத் தெரிந்தால் அவர்கள் பயப்பட நேரிடும் அதனால் அவர்கள் இருவரையும் வேறு ஒரு செல்லுக்கு மாற்றியுள்ளோம்.

இருவரும் ஒரே செல்லில்தான் இருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தனர்.

கொலை வழக்கில் தண்டனை பெற்ற பெண்ணின் பெயர் சயனைட் மல்லிகா. கர்நாடக மாநிலம் சித்துதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அவர் பெண்களை ஆசைவார்த்தை கூறி கூட்டிச் சென்று பணத்தையும், நகைகளையும் பறித்துவிடுவாராம். பின்னர் அந்த, பெண்களை சயனைட் வைத்து கொலை செய்துவிடுவாராம்.

இதே மாதிரி 18 பெண்களை ஏமாற்றி நகைகளையும், பணத்தையும் பறித்துவிட்டு சயனைட் கொடுத்து கொலை செய்துள்ளார். கடந்த 1999 முதல் 2002 வரையில் நடந்த இந்த 18 கொலை வழக்குகளில் பல வழக்குகளில் ஆயுள் தண்டனையும், ஒரு வழக்கில் மரண தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது.

அந்த கைதி அடைக்கப்பட்ட செல் அருகே இருந்தால் தேவையில்லாத பிரச்னைகள் வரும் என்று கருதிதான் சிறை அதிகாரிகள் சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் வேறு செல்லுக்கு மாற்றியுள்ளனர்.

சசிகலா, இளவரசி ஆகியோருக்கு நேவி புளு பார்டர் வைத்த 2 செட் காதி வெள்ளை சேலைகளும் பிளவுஸ்களும் தரப்பட்டுள்ளன. வழக்கம்போல் அனைத்து கைதிகளுக்கம் வழங்கப்படும் தட்டு, டம்ளர், லோட்டாவும் தரப்பட்டுள்ளது.

மேலும், இருவருக்கும் மருந்து பொருட்களை வைப்பதற்காக தனித்தனியாக ஆளுக்கு ஒரு பெட்டி தரப்பட்டுள்ளது என வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை