சரப்ஜித் கொலை வழக்கு: சிறை அதிகாரிக்கு 'வாரன்ட்'

தினமலர்  தினமலர்
சரப்ஜித் கொலை வழக்கு: சிறை அதிகாரிக்கு வாரன்ட்

லாகூர்: சரப்ஜித் கொலை வழக்கு விசாரணைக்கு, ஆஜராகாமல் தவிர்த்து வரும், லாகூர் சிறை அதிகாரி மீது, பாகிஸ்தான் கோர்ட், 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது.இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங். இவர், 1990ம் ஆண்டு, தவறுதலாக, பாகிஸ்தானுக்குள் சென்று விட்டார். 'பாகிஸ்தானில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு, சரப்ஜித் தான் காரணம்' என, அவரை, பாக்., போலீசார் கைது செய்தனர். இவருக்கு, லாகூர் கோர்ட் விதித்த துாக்கு தண்டனையை, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இவரது கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. அவரை மீட்க, இந்தியா சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக, அவருக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற, பாகிஸ்தான் அரசு தயங்கியது. இந்நிலையில், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, சரப்ஜித் சிங், துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகள், அமிர் தம்பா, முடாசர் ஆகியோரால், 2013ல் அடித்து கொல்லப்பட்டார்; இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து விசாரிக்க, லாகூர் ஐகோர்ட் நீதிபதி, மஷார் அலி அக்பர் நக்வி தலைமையிலான ஒரு நபர் கமிஷனை பாகிஸ்தான் அரசு அமைத்தது. இந்த கமிஷன் விசாரணை நடத்தி, தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து விட்டது. ஆனால், அறிக்கையை பாகிஸ்தான் அரசு இன்னும் வெளியிடவில்லை.இதற்கிடையில், சரப்ஜித் கொலை வழக்கு விசாரணை, லாகூர் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக கோரி, லாகூர் சிறை துணை கண்காணிப்பாளருக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது; ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, லாகூர் சிறை துணை கண்காணிப்பாளர் தொடர்ந்து ஆஜராகாமல் இருப்பதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, அவர் மீது, ஜாமினில் வெளிவரக் கூடிய வாரன்டை பிறப்பித்த நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

மூலக்கதை