ரயில்வே சொத்து சேதம் ஷாரூக்கான் மீது வழக்கு - ராஜஸ்தான் போலீஸ் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரயில்வே சொத்து சேதம் ஷாரூக்கான் மீது வழக்கு  ராஜஸ்தான் போலீஸ் அதிரடி

கோட்டா- ராஜஸ்தானில் இருந்து மும்பைக்கு ரயிலில் திரும்பும் போது, ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தியதாக நடிகர் ஷாரூக்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நட்சத்திரமான ஷாரூக்கான் சமீபத்தில் ‘ரயிஸ்’ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு விளம்பரம் செய்வதற்காக குஜராத், ராஜஸ்தான், டெல்லி ஆகிய இடங்களுக்கு தனது குடும்பத்தினருடன் ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்து ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்தினார். கடந்த மாதம் 23ம் தேதியன்று, அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா வந்திருந்தார்.

பின்னர், ஆகஸ்ட் கிராந்தி ராஜ்தானி விரைவு ரயிலை பிடிக்க கோட்டா ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை வழியனுப்ப ரயில் நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

கூட்டத்தில் இருந்து முன்னேறி ரயிலில் ஏறிய ஷாரூக்கான், ரயில் பெட்டியின் நுழைவாயிலில் நின்றபடி தனது கையில் வைத்திருந்த பரிசு பொருட்களை எடுத்து ரசிகர்களை நோக்கி வீசினார். உடனே அந்த பொருட்களை கைப்பற்றுவதற்காக ரசிகர்கள் முண்டியடித்தனர்.



அப்போது அவர்கள் அங்கிருந்த சரக்கு டிராலியை தள்ளி விட்டதில் அது அங்கிருந்த உணவு பொட்டலங்கள் கடை மீது சரிந்து, கடையை நாசப்படுத்தியது. மேலும், பிளாட்பாரத்தில் இருந்த ரயில்வே பொருட்களும் சூறையாடப்பட்டன.
இதையடுத்து, உணவு பொட்டலங்கள் விற்ற வியாபாரி விக்ரம்சிங், ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்திய ஷாரூக்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே நீதிமன்றத்தில் புகார் தொடர்ந்தார்.

இதை ஏற்ற நீதிமன்றம், ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்திய ஷாரூக்கான் மீது வழக்கு பதிய ரயில்வே போலீசுக்கு உத்தரவிட்டார். அதன்படி ஷாரூக்கான் மீது இபிகோ 429, 147, 149, 120(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் ரயில்வே போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஏற்கனவே குஜராத்தில் ஷாரூக்கான் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி ரசிகர் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை