பொருத்து வீட்டுக்கு 5,003 பேர் விண்ணப்பம்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு 5,003 பேர்,  கடந்த 13 ஆம் திகதி வரை தமது விருப்பங்களைத் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்,            

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீள்குடியேற்றத்தின் போது குடியமர்ந்துள்ள குடும்பங்களில்  16 ஆயிரத்து 119 குடும்பங்களுக்கு  வீட்டுத்திட்டத்தின் ஊடாக புதிய வீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது.               

இந்நிலையில், மீள்குடியேற்ற அமைச்சின் பொருத்து வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளை இணைந்து கொள்வதற்கு எமது மாவட்டத்துக்கு 11 ஆயிரம் விண்ணப்பப் படிவங்களை மீள் குடியேற்ற அமைச்சு வழங்கியுள்ளது.        

இதனை நாம், கண்டாவளை பிரதேச் செயலகப் பிரிவில் உள்ள 16 கிராம அலுவலர்கள் பிரிவுகளின் ஊடாக 2,300 விண்ணப்பங்களை பயனாளிகளுக்கு வழங்கிய நிலையில், பயனாளிகளிடம் இருந்து 1,294 பூரணப்படுத்திய   படிவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.                         

இதேபோன்று, பூநகரி பிரதேசச் செயலகப் பிரிவில் உள்ள 19, கிராம அலுவலகப் பிரிவுகளின் கிராம அலுவலர்கள் ஊடாக 1,340 விண்ணப்பங்களை பயனாளிகளுக்கு வழங்கிய நிலையில், மீளவும் பயனாளிகளிடம் இருந்து 957 பூரணப்படுத்தி படிவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 18 கிராம அலுவலகப் பிரிவுகளின் கிராம அலுவலர்கள் ஊடாக 520 விண்ணப்பங்களை பயனாளிகளுக்கு வழங்கிய நிலையில் மீளவும் 420 பூரணப்படுத்திய படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கரைச்சி பிரதேசச் செயலகப் பிரிவுக்குட்பட்ட 42 கிராம அலுவலகப் பிரிவுகளின் கிராம அலுவலர்கள் ஊடாக 5,550 விண்ணப்பங்களை பயனாளிகளுக்கு வழங்கிய நிலையில், பயனாளிகளிடம் இருந்து 2232, பூரணப்படுத்திய படிவங்கள்  இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளன.

4 பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 95 கிராம அலுவலர்கள் பிரிவுகளில் 8,410 விண்ணப்பங்களை பயனாளிகளுக்கு வழங்கிய நிலையில், பொருத்து வீட்டுத்திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்து பூரணப்படுத்திய 5,003 படிவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.                  

இதேவேளை, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதிக்குள் விடுமுறை தினங்கள் அதிகம் வந்துள்ளமையால் தம்மால் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே, கால நீடிப்பு வழங்குமாறு அனைத்து மாவட்ட பயணாளிகளும் முன் வைத்த கோரிக்கைக்கு அமைய மீள்குடியேற்ற அமைச்சினால் இன்று வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.     

எனவே பொருத்து வீட்டுத்திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் கால நீட்டிப்பு முடிவடைவதற்கு முன்னர் தமது பகுதி பிரதேசச் செயலகப் பிரிவுகள் ஊடாக பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைக்க முடியும்” என அவர் மேலும் கூறினார்.

மூலக்கதை