பிளாஷ்பேக்: டைட்டிலில் புதுமை செய்த வீணை எஸ்.பாலச்சந்தர்

தினமலர்  தினமலர்
பிளாஷ்பேக்: டைட்டிலில் புதுமை செய்த வீணை எஸ்.பாலச்சந்தர்

வீணை எஸ்.பாலச்சந்தர் அந்தக் காலத்திலேயே ஹாலிவுட் தரத்தில் திகில் படம் எடுத்தவர். அவர் எடுத்த படங்களிலேயே மிகவும் புகழ்பெற்றது பொம்மை. 1964ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை அவர் இயக்கி, முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அவருடன் வி.எஸ்.ராகவன், எல்.விஜயலட்சுமி, வி.கோபாலகிருஷ்ணன், லட்சுமி ராஜம் ஆகியோரும் நடித்தனர். பாலச்சந்தரே இசையும் அமைத்திருந்தார்.

பொதுவாக இப்போது வருவது போல படம் முடிந்தவுடன் போடப்படும் குளோசிங் டைட்டில் அப்போது கிடையாது. வணக்கம், அல்லது சுபம் என்ற டைட்டிலோடு படத்தை முடித்து விடுவார்கள். ஆனால் பொம்மை படத்தில் வீணை பாலச்சந்தர் ஒரு புதுமை செய்தார். படம் முடிந்ததும் திரையில் தோன்றி "நான்தான் வீணை எஸ்.பாலச்சந்தர். இந்த படத்தில் சோமசுந்தரமா நடிச்சிருக்கேன். மற்ற நடிகர் நடிகர் நடிகைகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்" என்று கூறி படத்தில் நடித்த அனைவரையும் திரையில் தோன்றச் செய்து அறிமுகம் செய்து வைப்பார்.

அதோடு ஒளிப்பதிவாளர், எடிட்டர், காஸ்ட்யூம் டிசைனர், ஆர்ட் டைரக்டர் என அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களையும் திரையில் தோன்றச் செய்து அறிமுகம் செய்வார். இறுதியாக "நான்தான் இந்தப் படத்தோட கதையை எழுதி இயக்கியவன். எங்க எல்லோரையும் விட இந்த படத்துல நடித்த முக்கியமானவர் இவர்தான்" என்று கூறியபடி பொம்மையை எடுத்து காட்டுவார். அத்துடன் சுபம் என்ற டைட்டிலுடன் படம் முடியும். இதை இக்காலத்தில் படம் முடிந்ததும் வரும் மேக்கிங் வீடியோவின் முன்னோடி என்று கூறலாம்.

(அருகில் உள்ள படத்தில் திரையில் தோன்றிய எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா, கே.ஜே.யேசுதாஸ், மற்றும் வீணை எஸ்.பாலச்சந்தர்)

மூலக்கதை