வாய்ப்பு இல்லாமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்தேன்: இசை அமைப்பாளர் போபோ சசி

தினமலர்  தினமலர்
வாய்ப்பு இல்லாமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்தேன்: இசை அமைப்பாளர் போபோ சசி

இசை அமைப்பாளர் தேவாவின் தம்பிகளான சபேஷ், முரளி இரட்டை இசை அமைப்பாளர்களாக இருக்கிறார்கள். இவர்களில் முரளியின் மகன் போபோ சசி. குளிர் 100 படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானர். பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது அட்டு படத்தின் மூலம் இசை அமைப்பாளராகியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

குளிர் 100 படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. நான்தான் பெரிய நடிகர், பெரிய இயக்குனர் படத்துலதான் இசை அமைக்கிறது என்ற திமிரா இருந்திட்டேன். சினிமாக்காரன் திமிரா இருந்தா சினிமாவும் தன்னோட திமிர் தனத்தை காட்டிவிடும் என்பது பின்னாடிதான் தெரிஞ்சுது. எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. வெளியில் எங்கு சென்றாலும் என்ன படம் பண்றீங்கன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. சில பேர்கிட்ட நிறைய படங்கள் பண்றதா பொய் சொல்ல வேண்டியது வந்தது.

ஒரு கட்டத்துல வீட்டை விட்டு வெளியில வருவதற்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தேன். இந்த நேரத்துலதான் அப்பா மூலமா இயக்குனர் ரத்தன்லிங்கா அறிமுகமாகி இந்தப் படத்துல வாய்ப்பு கொடுத்தார். என்னால் முடிந்த அளவிற்கு படத்துல என்னோட பெஸ்ட் கொடுத்திருக்கேன். பெரியப்பா (தேவா) உடம்பு சரியில்லாம இருந்தாலும் ஒரு பாட்டு பாடிக் கொடுத்தார். நான் மிகவும் நேசிக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு பாட்டு பாடிக் கொடுத்தாங்க. இந்த வாய்ப்பை நல்லபடியா பயன்படுத்தியிருக்கேன். இனி எனது பாதையும், பயணமும் தெளிவாக இருக்கும்" என்றார்.

மூலக்கதை