சென்னை நீதிமன்றத்தில் சுஷ்மிதா சென் ஆஜர்

தினமலர்  தினமலர்
சென்னை நீதிமன்றத்தில் சுஷ்மிதா சென் ஆஜர்

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். கார் மோசடி வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக அவர் வந்திருந்தார்.

இதுபற்றிய விபரம் வருமாறு: மும்பையை சேர்ந்த வாசு பண்டரி என்பவர் உள்நாட்டு கார்களை வாங்கி அதன் சேஸ் எண்களை மாற்றி குறைந்த மதிப்பீடு காட்டி விற்று வந்திருக்கிறார். 2005ம் ஆண்டு டயோட்டா லேலண்ட் கார் ஒன்றை வாங்கி அதன் சேஸ் எண்ணை மாற்றி அதனை சுஷ்மிதா சென்னுக்கு 56 லட்சத்துக்கு விற்றுள்ளார். இந்த பரிவர்த்தனையில் ஹெரன் சொக்சே ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சுஷ்மிதா சென் வீட்டில் சோதனை நடத்தி அந்த காரை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து வாசு பண்டரி மற்றும் ஹெரன் சொக்சே மீது சுங்க சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சுஷ்மிதா சென்னை சேர்த்திருந்தனர். இந்த வழக்கில் சாட்சியம் அளிக்கவே சுஷ்மிதா சென் வந்திருந்தார்.

அவர் அளித்த சாட்சியத்தில் "கார் புரோக்கர் ஹெரன் சொக்கே என்னை ஏமாற்றுவார் என்று தெரியாது. முறையான வியாபாரம் என்று நம்பியே அவரிடம் கார் வாங்கினேன். பின்னர் அதற்கு முறையான வரி செலுத்தி காரை பெற்றுக் கொண்டேன். இதனால் என் மீது எந்த தவறும் இல்லை. அதானல்தான் இந்த வழக்கில் நான் குற்றவாளியாகாமல் சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளேன். என்றார். பின்னர் தன்னிடமிருந்து டாக்குமெண்டுகளை நீதிமன்றத்தில் சமர்பித்தார். இந்த வழக்கு விசாரணை மீண்டும் வருகிற பிப்ரவரி மாதம் 7ந் தேதி நடக்கிறது.

மூலக்கதை