எதிர்ப்புப் படங்கள் பட்டியலில் '2.0'

தினமலர்  தினமலர்
எதிர்ப்புப் படங்கள் பட்டியலில் 2.0

தமிழ்த் திரையுலகத்தில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் என்ற பெயரை '2.0' படம் பெற்றுள்ளது. இந்தப் படத்தை ஷங்கர் இயக்க, ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் நாயகியாக எமி ஜாக்சன் தீவிர பீட்டா ஆதரவாளர். வெளிப்படையாகவே இதற்கு முன் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தவர்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு '2.0' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான சமயத்தில் 'நோ ஜல்லிக்கட்டு' என்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக கையெழுத்திடுங்கள் என்று கேட்டுக் கொண்டவர். அப்போதே அவரை எதிர்த்து தமிழ் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.

அப்போதே அவரை அந்தப் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால், அவற்றையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத தயாரிப்பு நிறுவனமும், இயக்குனர் ஷங்கரும் தொடர்ந்து எமி ஜாக்சனையே நாயகியாக நடிக்க வைத்து படத்தை முடித்துள்ளார்கள். இந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. விரைவில் படத்தின் இசை வெளியீடு, டீசர் வெளியீடு, டிரைலர் வெளியீடு என விழாக்கள் நடக்க உள்ளன.

பீட்டாவுக்கு ஆதரவான நடிகை எமி ஜாக்சன் '2.0' படத்தில் நாயகியாக நடித்துள்ளதால் இந்தப் படம் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் எதிர்ப்புப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. பீட்டாவுக்கு ஆதரவாக இருந்த மற்றவர்களின் படங்களும் சிக்கலுக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளது.

மூலக்கதை