பொன். ராதாகிருஷ்ணன் உட்பட அத்தனை தமிழக எம்.பிக்களும் ராஜினாமா செய்யுங்க!- வலுக்கும் குரல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொன். ராதாகிருஷ்ணன் உட்பட அத்தனை தமிழக எம்.பிக்களும் ராஜினாமா செய்யுங்க! வலுக்கும் குரல்

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அலங்காநல்லூரில் கடந்த நான்கு நாட்களாகவும், சென்னை, கோவை, நெல்லை, மதுரையில் கடந்த 3 நாட்களாகவும் இரவு பகலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

ஆனால், ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழர் உணர்வுகளை நன்றாக அறிந்துள்ளேன். அதனை மதிக்கிறேன். இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். அவரசச் சட்டம் குறித்து அவர் எதுவும் அறிவிக்கவில்லை.

அதேபோல், மாநில அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள். பொறுமையாக இருங்கள் நல்லதே நடக்கும் என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி கைவிரித்ததையடுத்து, போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எழுச்சி இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே பொய்யான வாக்குறுதிகளை கொடுத்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

நாங்க ஓட்டு போட்டு நீங்க ஆட்சிக்கு வந்தீங்க... எங்களுக்கு நல்லது செய்யாத நீங்க ராஜினாமா செய்யுங்க. இல்லையா ஆட்சியை கலைங்க என்று ஆவேசமாக அலங்காநல்லூர் முதல் ஐடி கம்பெனி ஊழியர்கள் வரை கூறத்தொடங்கியுள்ளனர்.

மூலக்கதை