மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதார வளர்ச்சி பாதிப்பு - ஐஎம்எஃப்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதார வளர்ச்சி பாதிப்பு  ஐஎம்எஃப்

நவம்பர் 8ஆம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இது குறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த சர்வதேச நாணய நிதியம் இதன் மூலம் சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை தடுக்க முடியும் என்று கூறியது.

இந்தியாவில் உள்ள மிகவும் விலை உயர்ந்த 500, 1000 கரன்சிகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவு வரவேற்புக்குரியது. சட்ட விரோத பண பரிவர்த்தனையை தடுக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஐஎம்எஃப் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்று செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஐஎம்எஃப் 'வேர்ல்டு எகனாமிக் அவுட்லுக்' என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஏற்கனவே கணித்திருந்த 7.6 சதவிகிதத்திலிருந்து குறைந்தது ஒரு சதவிகிதம் வரையில் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 1% குறைந்துள்ளது. இதன் தாக்கம் 2018ஆம் ஆண்டிலும் நீடித்து 0.4% பொருளாதார வளர்ச்சி குன்றும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஐஎம்எஃப் பொருளாதார அறிக்கை திங்களன்று வெளியிடப்பட்டது. இதன்படி நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.6 சதவிகித வளர்ச்சியிலிருக்கும், அடுத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.2 சதவிகிதம் என்று இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்னதாக இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6% என்று ஐ.எம்.எஃப். குறிப்பிட்டிருந்தது. இப்போது இந்தியா பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

இந்தியாவில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 1% குறையும். அடுத்த ஆண்டு 0.4% குறையும், காரணம் பணத்தட்டுப்பாடு, சம்பள விநியோகத்தில் இடையூறு ஆகியவை. உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2016ஆம் ஆண்டுக்கு 3.1% என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

டொனால்டு டிரம்ப் அதிபராக பொறுப்பேற்பது அமெரிக்க பொருளாதாரத்தில் உடன்பாடான தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது, ஆனாலும் தாக்கத்தின் அளவை உடனடியாக கணித்து விடவும் முடியாது. கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக வெள்ளைமாளிகையும், நாடாளுமன்றமும் ஒரே கட்சியின் கையில் உள்ளதால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் சூழல் உள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

2017ஆம் ஆண்டிற்கான சீனாவின் வளர்ச்சி விகிதம் 6.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதம் ஆகவும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.7 சதவிகிதம் ஆகவும் இருக்கும். 2017ஆம் ஆண்டு சீனாவின் வளர்ச்சி விகிதம் உலகப்பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைத் தீர்மானிக்கும் என்று ஐஎம்எப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அமெரிக்கா மற்றும் சீனாவில் பொருளாதாரம் 2018ஆம் ஆண்டில் சற்றே முன்னேற வாய்ப்பிருந்தாலும் இந்தியா, பிரேசில், மெக்சிகோ போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கான வளர்ச்சி விகிதம் சற்றே சரிவுப்பாதையில் செல்லும் என்று ஐ.எம்.எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை