கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லை வந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லை வந்தது

ஊத்துக்கோட்டை - ஆந்திரா-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டு தோறும் ஆந்திர அரசு, தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும், சேதாரமாக 3 டிஎம்சியும் என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். கண்டலேறுவில் போதிய அளவு தண்ணீர் இல்லை என கூறி 2015ம் ஆண்டு தண்ணீர் திறக்கவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை அக்டோபர் மாதம்தான் வழங்கியது. பின்னர் திடீரென குறைந்தது.

டிசம்பர் மாதம் வரை ஒரு டிஎம்சிக்கும் குறைவாகவே தண்ணீர் கிடைத்தது.
இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் வறண்டது.



குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே இந்த மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு பிறகு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அதன் பேரில் கடந்த 9ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

பின்னர், 12ம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து, கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்பேரில் முதலில் 500 கன அடி, 1000 கன அடி, 1500 கன அடி என படிப்படியாக திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று முன்தினம் வினாடிக்கு 1700 கன அடியாக உயர்த்தப்பட்டது.

ஆனால் இந்த தண்ணீர், கிருஷ்ணா கால்வாய் வழியாக 152 கிமீ தூரத்தை கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு 3 அல்லது 4 நாட்களுக்குள் வந்து சேர வேண்டும்.

ஆனால், கடந்த 9ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று வரை தமிழக எல்லைக்கு வந்து சேரவில்லை.

இதற்கு காரணம், ஆந்திர விவசாயிகள், விவசாயத்துக்காக கிருஷ்ணா கால்வாயில் கட்டப்பட்டுள்ள சிறிய மதகுகளை திறந்து தங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பியதாகும். 10 நாட்களாகியும் தண்ணீர் வராததால் அதிகாரிகள் திகைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் கிருஷ்ணா நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்ைட ஜீரோ பாயின்டுக்கு வந்தது.

வினாடிக்கு வெறும் 2 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.

இன்று மாலைக்குள் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

.

மூலக்கதை