100 நாள் வேலைக்கு கூலி வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
100 நாள் வேலைக்கு கூலி வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி - கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  வசிக்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த பலர் மக்கள் தேசிய ஊரக  வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்து  வருகின்றனர்.

இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சரிவர கூலி வழங்கவில்லை என்றும் வர்தா புயலால் இக்கிராம மக்களை பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எந்தவித நிவாரண உதவியும் ஊராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், பெத்திக்குப்பம் சாமிரெட்டி கண்டிகை கிராம சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டனர்.

திடீரென சாலை மறியலில்  ஈடுபட்டு 100 நாள் வேலை திட்ட கூலியை முறையாக வழங்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பேசினால்தான் அனைவரும் கலைந்து செல்வோம் என்றனர்.

இதையடுத்து, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஐவண்ணன் வந்து பேசினார். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரண தொகையும் 100 நாள் வேலை செய்த அனைவருக்கும் கூலி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என  உறுதியளித்தார்.

இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

.

மூலக்கதை