காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 3வது நாளாக போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 3வது நாளாக போராட்டம்

காஞ்சிபுரம் - ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரியும் பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்திலிருந்து பஸ் நிலையம் நோக்கி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு பேரணியாக சென்றனர். அவர்கள், திடீரென பஸ் நிலையம் அருகே சாலை மறியல் செய்தனர்.

பின்னர் அன்றிரவு இரவு திடீரென காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே மாணவர்கள் திரண்டு விடிய விடிய போராட்டம் நடத்தினர். நேற்று காலையிலும் காஞ்சிபுரம் வணிகர் வீதியில் போராடினர்.

இதைத்தொடர்ந்து வாட்ஸ் அப், குறுந்தகவல் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.   ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

3வது நாளாக இன்றும் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்களது கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனஅவர்கள் தெரிவித்துள்ளனர். செங்கல்பட்டு: செங்கல்பட்டில் அனைத்து வணிகர்கள் சங்கம், பொது நல சங்கம், ரோட்டரி சங்கம்,  லயன்ஸ் கிளப், செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றம் உள்ளிட்ட அனைத்து பொது  நலச்சங்கங்களும் மாணவர்கள், இளைஞர்களுடன் சேர்ந்து செங்கல்பட்டு பழைய பஸ்  நிலையத்தில் இருந்து ஊர்வலமாக இன்று காலை புறப்பட்டனர்.

சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து, இதில் கலந்து கொண்டனர். புதிய பஸ் நிலையம், தண்டுக்கரை, வழியாக செங்கல்பட்டு கேஆர்சி திடலில்  குவிந்தனர்.



சிங்கபெருமாள் கோயிலில் அனைத்து பொது நலச்சங்கம், கேபிள்  டிவி ஆபரேட்டர்கள், வணிகர்கள், இளைஞர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தினர். நேற்றிரவும்  செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கேஆர்சி திடலில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை போராட்டம் நடத்தினர்.

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கூட் ரோடு பகுதியில் அன்னை தெரசா கல்லூரி மற்றும்  டான்போஸ்கோ பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என 100க்கும்  மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடந்தது.

விடிய விடிய நடந்த இந்த  போராட்டம், இன்று காலையிலும் நீடித்தது.

திருவள்ளூர்: திருவள்ளூர்  மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கல்லூரி நிறுவனங்கள் இன்று விடுமுறை  அறிவித்துள்ளன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்  திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்றும் அறவழியில் தொடர் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு, ரேக்ளா  அமைப்பின் நிர்வாகிகள், திமுக, பாமக உட்பட பல்வேறு கட்சியினர், பெண்கள்,  பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் அமைதியான முறையிலேயே போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால்  திருவள்ளூர் போலீசாரும், மாணவர்களின் போராட்டத்திற்கு எந்த தடையும் விதிக்காமல் அவர்களுக்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்து  வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் 3 வது நாளாக  தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் குவித்துள்ளனர்.

.

மூலக்கதை