மாநில அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்: முதல்வர்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
மாநில அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள்: முதல்வர்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள் என தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பீட்டாவை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மூன்றாவது நாளாக தொடரும் போராட்டங்களில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதினர், பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்று இருக்கும் நிலையில், பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று சந்தித்து இப்பிரச்னை குறித்து விவாதித்தார்.

அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, வறட்சி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

மேலும், பிரதமரை சந்திக்க அவகாசமும் கோரப்பட்டிருந்தது. அதன்படி, பிரதமரை இன்று சந்தித்தேன். அப்போது, ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர வலியுறுத்தினேன்.

வறட்சி குறித்தும் பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,565 கோரப்பட்டுள்ளது. போதுமான நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழர் உணர்வுகளை நன்றாக அறிந்துள்ளேன். அதனை மதிக்கிறேன். இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள். பொறுமையாக இருங்கள் நல்லதே நடக்கும். நன்மையே யாவும்!! நன்மையாய் முடியும்!! என்றார்.

மூலக்கதை