பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் தற்கொலை: பலர் கவலைக்கிடம்!

PARIS TAMIL  PARIS TAMIL
பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் தற்கொலை: பலர் கவலைக்கிடம்!

 மெக்ஸிக்கோவின் வடபகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய பதினைந்து வயதுச் சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.

 
வகுப்பறையில் பாடத்துக்குத் தேவையான குறிப்புகளை ஆசிரியை வழங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மாணவன் அமர்ந்த நிலையிலேயே சக மாணவன் ஒருவனைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினான்.
 
சத்தம் கேட்டு ஆசிரியை திரும்பிப் பார்ப்பதற்கு முன் நாற்காலியை விட்டு எழுந்த அந்த மாணவன் ஆசிரியரைச் சுட்டு வீழ்த்தியதுடன், அமர்ந்திருந்த மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினான். 
 
இதைக் கண்ட ஏனைய மாணவர்கள் மேசைகளுக்கு அடியில் புகுந்து கொண்டனர்.
 
பின்னர் கொலையாளி தனது தலையில் துப்பாக்கியை வைத்து இயக்கியபோதும், குண்டுகள் இல்லாததால் துப்பாக்கி இயங்கவில்லை.
 
உடனே தனது மேசைக்குத் திரும்பிய அந்த மாணவன், தன் வசமிருந்த குண்டுகளை நிரப்பிய பின் தன் தலையில் வைத்து துப்பாக்கியை இயக்கினான். இதில் அவன் படுகாயமடைந்தான்.
 
இதையடுத்து ஆசிரியை உட்பட காயமடைந்த ஐந்து பேரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கு, சிகிச்சை பலனின்றி துப்பாக்கி தாரி மாணவன் உயிரிழந்தான்.
 
படுகாயமடைந்த ஆசிரியையும் இரண்டு மாணவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
குறித்த மாணவன் மனச்சிதைவுக்காக சிகிச்சை பெற்றுவந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கு அதுவே காரணமாக இருக்கலாம் என்றும் பாடசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

மூலக்கதை