ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் திரைப்பட காட்சிகள் ரத்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் திரைப்பட காட்சிகள் ரத்து!

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கூட்டமைப்பு சார்பில் அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் இருவரும் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை எந்தப் போராட்டத்துக்கும் இப்படியொரு தன்னெழுச்சியான ஆதரவு, அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் கிடைத்ததில்லை. அந்த வகையில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் சுதந்திர இந்தியா பார்த்திராத முக்கிய போராட்டமாக மாறியுள்ளது.

யார் தலைமையும் இல்லாமல் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இந்தப் போராட்டத்தைப் பார்த்து, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் கால வரையறையற்ற விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

திரைத்துறையின் அனைத்து அமைப்பினரும் இந்தப் போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பு ஆகிய இரு அமைப்புகளும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் சினிமா காட்சி ரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

நாளை 20.117 தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை முதல் மாலை 6 மணிவரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக இரு அமைப்புகளின் தலைவர்களான அபிராமி ராமநாதன் மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

மூலக்கதை