பீட்டாவுக்கு எதிராக ஒட்டுமொத்த திரையுலகமும்... பீட்டாவிருந்து விலகுவார்களா த்ரிஷா, எமி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பீட்டாவுக்கு எதிராக ஒட்டுமொத்த திரையுலகமும்... பீட்டாவிருந்து விலகுவார்களா த்ரிஷா, எமி?

ஒரு காலத்தில் நான் பீட்டா உறுப்பினர் அல்லது தூதுவர் என்று சொல்லிக் கொள்வதை பெருமையாக, கவுரவமாகக் கருதியவர்கள்தான் திரையுலகினர். சில நடிகர்கள் குடும்பத்தோடு அதில் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

இன்று நிலைமை தலைகீழ். பீட்டா பெயரைச் சொல்லவே அஞ்சும் சூழலை தமிழ் இளைஞர் சமூகம் உருவாக்கியுள்ளது. பல நடிகர்கள், நடிகைகள் பீட்டாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு கூட பீட்டா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால், இப்போது பீட்டா என்றால் என்னவென்றே தெரியாது என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் மொத்த அமைப்புகளும், நடிகர் நடிகைகளும் பீட்டாவைத் தடை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

திரையுலகில் பீட்டாவைத் தடை செய்ய வேண்டும் என்ற முழக்கத்தை முதலில் எழுப்பியவர் சிம்பு. அதைத் தொடர்ந்து நடிகர் விஜய்யும் பீட்டாவை நாட்டிலிருந்தே வெளியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

நடிகர்கள் சூர்யா, விக்ரம், ஜிவி பிரகாஷ், ஹிப் ஹாப் ஆதி என பலரும் பீட்டாவைத் தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். பாரதிராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருமே பீட்டாவை நாட்டை விட்டே ஓட வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

இந்த சூழலில்தான் இன்று திரையுலகின் அனைத்து அமைப்புகளும் பிலிம்சேம்பர் வளாகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் ஒருமித்து குரல் எழுப்பியுள்ளனர்.

பீட்டா என்ற அமைப்பிலிருந்து முழுவதுமாக வெளியேற பல நடிகர்கள் முடிவு செய்துள்ளனர். அதே நேரம் நடிகைகள் த்ரிஷா, எமி ஜாக்சன் போன்றோர் இன்னமும் பீட்டாவிலிருந்து வெளியேறாமல், அதன் தூதர்களாகத் தொடர்கிறார்கள். இவர்களும் வெளிப்படையாக அந்த அமைப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்பது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் கோரிக்கையாக உள்ளது. பீட்டாவிலிருந்து வெளியேறி, உப்பிட்ட தமிழ் மண்ணுக்கு கொஞ்சமாவது விசுவாசம் காட்டுவார்களா? பார்க்கலாம்!

மூலக்கதை