இவங்களப் பாத்து கத்துக்கங்க.. ‛குட்டு' வைக்கும் இளைஞர்கள்

தினமலர்  தினமலர்
இவங்களப் பாத்து கத்துக்கங்க.. ‛குட்டு வைக்கும் இளைஞர்கள்

சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் போராடி வரும் இளைஞர்கள், போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போலீசாருக்கு உதவியதுடன்,
அங்கிருந்த குப்பைகளை தாங்களே சுத்தம் செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினர்.

போராட்டம்:


தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் இளைஞர்களும். பெண்களும் ஒன்று திரண்டனர். மாபெரும் இளைஞர் சக்திக்கு முன்னாள் தமிழகமே குலுங்கியது. கடந்த 3 நாட்களாக அறப்போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் அனைவரும், தங்களின் வீடு மறந்து, களிப்பு துறந்து ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என ஓரணி திரண்டு போராடி வருகின்றனர்.

காவல்துறைக்கு தோழனாக..


சென்னை- மெரினாவில் சுமார் 5 கி.மீ., தூரத்துக்கு திரண்டுள்ள இளைஞர்களும், பெண்களும் கொட்டும் பனியிலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவில் மெரினா சாலையில் போக்குரவத்து நெரிசல் ஏற்படும் போதெல்லாம், போலீசாருக்கு துணையாக களமிறங்கும் இளைஞர்கள், போக்குவரத்து நெரிசலை சீர் செய்கின்றனர்.

மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்கள் சாப்பிட்டு வீசிய இலைகள், பேப்பர்கள், வாட்டர் கேன்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை அவர்களே அப்புறப்படுத்தினர். நள்ளிரவு நேரத்திலும் சளைக்காமல் அவர்கள் செய்த இப்பணி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னுதாரணம்:


கட்சி பொதுக்கூட்டம் போன்று கூட்டம் நடக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது, குப்பைகளை குவிப்பது அதை அரசு துப்புரவு பணியாளர்களை கொண்ட சுத்தம் செய்வது என்று இருந்த வழக்கத்தை இந்த இளைஞர்கள் மாற்றியிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக திரண்டுள்ள இளைஞர்கள் மது அருந்தாமல், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்காமல் போராட்டப்பாதையிலிருந்து சிறிதும் விலகாமல், அறவழியில் நடத்தி கொண்டிருப்பது பலருக்கு ‛குட்டு' வைப்பது போல் அமைந்துள்ளது . இவர்கள் அனைத்து தரப்பினருக்கும் முன்னுதாரணமாக திகழ்வதற்காக மக்கள் மனதில் என்றும் நிற்பார்கள் இந்த இளைஞர்கள்..

மூலக்கதை