மெரினாவில் விஸ்வரூபம்: மிரண்ட போலீஸ்

தினமலர்  தினமலர்
மெரினாவில் விஸ்வரூபம்: மிரண்ட போலீஸ்

சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சென்னை மெரினாவில் குவிந்தோரின் எண்ணிக்கை, 50 ஆயிரத்திற்கும் அதிகம் எனக் கூறும் போலீசார், எதிர்பாராத வகையில் கூட்டம் திரண்டதால், மிரண்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தடையால், தமிழகத்தில், இந்த ஆண்டும், பொங்கலுக்கு, ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை. 'தடையை நீக்கி, இந்த ஆண்டே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்' என, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என, பல தரப்பினரும் போராடி வருகின்றனர்.

சென்னை மெரினாவில், மாணவர்கள், இளைஞர்கள் என, ஏராளமானோர் போராடினர். நேற்று, கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், 12 ஆயிரம் போலீசார், சுற்று அடிப்படையில், பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை, 50 ஆயிரத்திற்கும் அதிகம் என, போலீசார் கணித்துள்ளனர்.அத்துடன், இந்த போராட்டத்தின் வரலாற்று தன்மை கருதி, 'வீடியோ'விலும் பதிவு செய்துள்ளனர்; புகைப்படங்களும் எடுக்கப்பட்டு உள்ளன. இவ்வளவு பெரிய கூட்டம் எப்படி திரண்டது, அதன் பின்னணியில் உள்ளோர் யார் என்பது குறித்து, உளவுத் துறை மூலமும் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த கூட்டம் நாங்கள் எதிர்பாராதது. சென்னையே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் திரண்டு உள்ளனர். 'இதை பாடமாக கொண்டு, எதிர்காலத்தில், இதுபோன்று கூட்டம் திரண்டால் எப்படி சமாளிப்பது என, ஆவணம் தயாரித்து வருகிறோம்' என்றார்.

மூலக்கதை