ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் பவுச்சார்டு

தினகரன்  தினகரன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, கனடா வீராங்கனை யூஜெனி பவுச்சார்டு தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் சீனாவின் ஷுவாய் பெங்குடன் நேற்று மோதிய பவுச்சார்டு 7-6 (7-5) என்ற கணக்கில் டை பிரேக்கரில் போராடி வென்று முதல் செட்டை கைப்பற்றினார். அடுத்த செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அவர் 7-6 (7-5), 6-2 என்ற நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் தனது 2வது சுற்றில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் சுவிஸ் வீராங்கனை ஸ்டெபானி வோகெலியை எளிதாக வீழ்த்தினார். நம்பர் 1 வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-7 (3-7), 6-2 என்ற செட் கணக்கில் சக ஜெர்மனி வீராங்கனை கரினா வித்தோப்டை வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முன்னணி வீராங்கனைகள் கார்பினி முகுருசா (ஸ்பெயின்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவா, ஸ்வெட்லனா கஸ்னட்சோவா (ரஷ்யா), ஜெலினா ஜன்கோவிச் (செர்பியா), அலிசான் ரிஸ்கி (அமெரிக்கா), கிறிஸ்டினா பிளிஸ்கோவா (செக்.) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்) 7-5, 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் நோவா ரூபினை வீழ்த்தினார். சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்டீவ் ஜான்சனை (அமெரிக்கா) வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். ஜெர்மனியின் மிஸ்சா ஸ்வெரவ் 6-7 (4-7), 6-7 (4-7), 6-4, 7-6 (9-7), 9-7 என 5 செட்களில் கடுமையாகப் போராடி அமெரிக்க வீரர் ஜான் ஐஸ்னரை வீழ்த்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 4 மணி, 10 நிமிடம் நீடித்தது. நம்பர் 1 வீரர் ஆண்டி மர்ரே (இங்கிலாந்து) தனது 2வது சுற்றில் 6-3, 6-0, 6-2 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் ருப்லெவை வென்றார். முன்னணி வீரர்கள் கெய் நிஷிகோரி (ஜப்பான்), ஆண்ட்ரியாஸ் செப்பி (இத்தாலி), ஜோ வில்பிரைடு சோங்கா (பிரான்ஸ்), சாம் குவெரி (அமெரிக்கா), தாமஸ் பெர்டிச் (செக்.), விக்டர் டிராய்கி (செர்பியா), ஜாக் சாக் (அமெரிக்கா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - பார்போரா ஸ்டிரைகோவா (செக்.) ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் ஜோசெலின் ரே - அன்னா ஸ்மித் ஜோடியை எளிதாக வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்னா - பாப்லோ கியூவஸ் (உருகுவே) ஜோடி 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் தாமஸ் பெல்லூக்சி (பிரேசில்) - மேக்சிமோ கோன்சாலெஸ் (அர்ஜென்டினா) ஜோடியை வீழ்த்தியது.

மூலக்கதை