பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகள்: டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன்...

தினத்தந்தி  தினத்தந்தி
பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகள்: டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன்...

சென்னை,

இது குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

6 தடுப்பணைகள்

தமிழ்நாட்டில் உருவாகி கேரளம் வழியாக பாய்ந்து மீண்டும் தமிழகத்திற்கு வரும் பவானி ஆற்றின் குறுக்கே, அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் 6 தடுப்பணைகளை கட்ட கேரள அரசு முடிவு செய்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

காவிரி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான பவானி நீலகிரி மாவட்டத்தின் குந்தா மலைப்பகுதியில் உருவாகி முக்காலி வழியாக கேரளத்திற்குள் சென்று அட்டப்பாடி பள்ளத்தாக்கை வளப்படுத்திய பின்னர் அத்திக்கடவு வழியாக மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது. கேரளத்தில் ஒட்டுமொத்தமாக 22 கி.மீ. தொலைவு மட்டுமே பாய்கிறது. அதிலும் பெரும்பாலான பகுதி வனப்பகுதியாகும். அப்பகுதியில் மொத்தம் ஆறு இடங்களில் தடுப்பணைகளை கட்ட கேரள அரசு தீர்மானித்துள்ளது. அதில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் 2 தடுப்பணைகளை கட்டும் பணிகள் கடந்த இரு வாரங்களாக முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பவானி ஆற்றில் தண்ணீர் ஓடாததை பயன்படுத்திக்கொண்டு ராட்சத எந்திரங்களின் உதவியுடன் இப்பணிகள் நடந்து வருகின்றன.

குடிநீர் தட்டுப்பாடு, வேளாண்மை பாதிப்பு

அதுமட்டுமின்றி, சாலையூர், சீரக்கடவு, பாடவயல், சாவடியூர் ஆகிய இடங்களில் மேலும் நான்கு தடுப்பணைகளை கட்டுவதற்கான பணிகளும் அடுத்த சில நாட்களில் தொடங்கும் என்றும், ஒரு சில வாரங்களில் ஆறு தடுப்பணைகளையும் கட்டி முடிக்க கேரள அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்த ஆறு தடுப்பணைகளும் கட்டப்பட்டால் பவானியில் தமிழகத்திற்கு தண்ணீர் வருவது முற்றிலுமாக நின்று விடும். இதனால் கோவை மற்றும் திருப்பூரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்; வேளாண்மையும் பாதிக்கப்படும்.

எனவே, தமிழக அரசு உடனடியாக விழித்துக்கொண்டு, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் கேரள அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும், அரசியல் சார்ந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மிகவும் கண்டிக்கத்தக்கது

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் பணிகளை தொடங்கியுள்ளது. இது கேரள அரசின் நியாயமற்ற செயலாகும். காரணம் பவானி ஆற்றின் தண்ணீர் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயம் நடைபெறுவதோடு, பொது மக்களின் குடிநீருக்காகவும் பயன்படுகிறது.

குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி வாழ் மக்கள் பவானி ஆற்று தண்ணீரை நம்பித்தான் வாழ்கிறார்கள். இச்சூழலில் பவானி ஆற்றின் குறுக்கே கோவைக்கு அருகே உள்ள தேக்குவட்டை என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணைக்கட்டும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தடுத்து நிறுத்த வேண்டும்

கேரள அரசின் இத்தகைய நடவடிக்கை தமிழக அரசுக்கு தெரியுமா?, தடுப்பணை கட்டுவதற்காக காவிரி நடுவர் மன்றத்திடம் அனுமதி பெற்றார்களா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். எப்படி இருப்பினும் உடனடியாக தமிழக அரசு கேரள அரசின் இம்முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் மத்திய அரசும் கேரள அரசின் இச்செயலைக் கண்டிப்பதோடு, தடுப்பணை கட்டக்கூடாது என்பதை உறுதிபட தெரிவிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை