கட்டாக்கில் இன்று 2வது ஒருநாள் போட்டி தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

தினகரன்  தினகரன்

கட்டாக்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, கட்டாக் பாரபட்டி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 0-4 என்ற கணக்கில் பரிதாபமாக தோற்றது. அடுத்து தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்கள் நடக்கின்றன. புனே மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், 351 ரன் என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. தொடக்கத்தில் 63 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கேப்டன் விராத் கோஹ்லி - கேதார் ஜாதவ் ஜோடி அபாரமாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 200 ரன் சேர்த்தது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கோஹ்லி 122, கேதார் 120, ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 40 ரன் விளாசினர்.பேட்டிங் வரிசை வலுவாக இருந்தாலும், முதல் போட்டியில் பந்துவீச்சு அவ்வளவாக எடுபடாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. குறிப்பாக, கடைசி 10 ஓவர்களில் 100 ரன்னுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்தது கேப்டன் கோஹ்லியை அதிருப்தியடையச் செய்தது. உமேஷ், அஷ்வின் பந்துவீச்சு கை கொடுக்கவில்லை. உமேஷுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் சேர்க்கப்படலாம். தொடக்க வீரர் தவான் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறுவதால், அஜிங்க்யா ரகானே சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது.லோகேஷ் ராகுல், யுவராஜ், டோனி ஆகியோர் கணிசமாக ரன் குவிப்பது அவசியம். தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. அதே சமயம், இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தும் வெற்றியை வசப்படுத்த முடியாததால், இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து வீரர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஜேசன் ராய், ஜோ ரூட், ஸ்டோக்ஸ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இவர்களுடன் ஹேல்ஸ், கேப்டன் மார்கன், பட்லர், மொயீன் அலி ஆகியோரும் பங்களித்தால் இந்திய பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். மாலை நேர பனிப்பொழிவு பந்துவீச்சாளர்களுக்கு சற்று சிரமத்தை கொடுக்கலாம். கடைசியாக 2014ல் இங்கு நடந்த ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 363 ரன் குவித்த இந்தியா, இலங்கை அணியை 169 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி 5-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், அஜிங்க்யா ரகானே, மணிஷ் பாண்டே, யுவராஜ் சிங், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஷ்ரா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பூம்ரா, கேதார் ஜாதவ், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ். இங்கிலாந்து: இயான் மார்கன் ( கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், லியம் டாவ்சன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியம் பிளங்க்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்.

மூலக்கதை