2 பைபிள்களில் சத்தியம் செய்து அமெரிக்க புதிய அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்பு

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நாளை 2 பைபிள்களில் சத்தியம் செய்து பதவியேற்கிறார். இதையொட்டி வாஷிங்டனில் கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8ம் தேதி நடைபெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியும் ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து இந்த வெற்றியை பெற்றார். இதையடுத்து நாளை அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.வாஷிங்டனில் உள்ள வரலாற்று புகழ்மிக்க நேஷனல் மாலில் இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடாக மாற்றுவோம் என்ற கருத்தை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டொனால்ட் டிரம்புக்கு அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரோபார்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அப்போது அவர் முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் பராக் ஒபாமா பயன்படுத்திய ஒரு பைபிள் மற்றும் 1955ம்  ஆண்டு ஜூன் 12ம் தேதி சிறுவயதில் நியூயார்க்கில் உள்ள சண்டே சர்ச் ஆரம்ப பள்ளியில் டிரம்ப் படித்தபோது அவருக்கு தாயார் பரிசாக வழங்கிய மற்றொரு பைபிள் மீதும் டிரம்ப் சத்தியம் செய்து புதிய அதிபராக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொள்கிறார்.தொடர்ந்து துணை அதிபர் மைக் பென்சும் பதவியேற்கிறார். அவருக்கு மற்றொரு நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பையொட்டி இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினர் குவிந்தவண்ணம் உள்ளனர். பதவியேற்பு விழாவில் பராக் ஒபாமா உள்பட முன்னாள் அதிபர்கள், அமைச்சர்கள், அரசு உயர்அதிகாரிகள், கவர்னர்கள் உள்பட 1600 பேர் பங்ேகற்கின்றனர். இதையொட்டி அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது. டிரம்பின் ஆதரவாளர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த தொடங்கி விட்டனர். அரசு சார்பில் இன்று முதல் நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ராணுவ இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய சம்மர் ஹெர்னான் உள்ளிட்ட பெண்கள் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலிவுட் கலைஞர்கள் நடன நிகழ்ச்சிடொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவையொட்டி தலைநகர் வாஷிங்டனில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 30 பாலிவுட் கலைஞர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. இதையொட்டி முன்னாள் மிஸ் இந்திய அழகி மனாஷ்வி மாம்கை தலைமையில் இந்திய பாலிவுட் நடன கலைஞர்கள் 7 நிமிடம் நடனம் ஆடுகிறார்கள். இதற்காக நடன ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முகுந்த் தலைமையிலான குழு வாஷிங்டனில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அமெரிக்க கலைஞர்களுடன் இணைந்து இந்த நடன நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

மூலக்கதை