அமெரிக்கா, துபாயிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தமிழர்கள்  போராட்டம் நடத்தினர். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அலங்காநல்லூரில் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இதற்கு ஆதரவாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா, மலேசியா, சிங்கப்பூர் உள்பட 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.  அமெரிக்காவில் உள்ள டல்லாஸில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றனர். கடும் குளிர் மற்றும் மழையை பொருட்படுத்தாது ஆர்வத்துடன் கலந்துகொண்ட தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள். மேலும் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனு எழுதப்பட்டு அதில் கையெழுத்துகளும் பெறப்பட்டன. டல்லாஸில் இயங்கும் அனைத்து தமிழ்சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஜல்லிகட்டு விழிப்புணர்வு போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இதேபோல் ஆஸ்டின் நகரிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வடமேற்கு நகரமான சியாட்டிலில் ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து மகாத்மா காந்தி சிலை அருகில் நடந்த அறவழிப்போராட்டத்தில் குழந்தைகள் உட்பட சுமார் 250 பேர் கலந்துகொண்டனர்.தமிழர்கள் அதிகம் வசிக்கும் நியூயார்க், ஜார்ஜியா, வாஷிங்டன், நியூஜெர்சி, மெக்சிகன், சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட மாகாணங்களிலும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கிலாந்து தலைநகர் லண்டன் நகரிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தமிழர்கள் கலந்து  கொண்டனர். இந்திய தூதரகம் முன்பு இந்த போராட்டம் நடந்தது. இதில் பீட்டா அமைப்பை கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து தூதரகத்தில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு ஒன்றும் அளிக்கப்பட்டது.இதேபோல் துபாயில் நடந்த பொங்கல் விழாவிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பப்பட்டது.கட்ஜூவின் அசத்தல் பதிவுமுன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தீரத்துடனும் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டை மீட்பதற்காக என்னென்ன செய்யவேண்டும் என ஆலோசனைகளையும் அவர் கூறி வருகிறார். தமிழக எம்பிக்கள் எங்கே போனார்கள் என கோபம் காட்டிய முன்னாள் நீதிபதி கட்ஜூ, நேற்று தனது  பேஸ்புக் பதிவில், “தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா” என்று பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் பெரும் எழுச்சியுடன் நடத்திவரும் போராட்டத்தைதான் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

மூலக்கதை