என்எஸ்ஜி, அசார் விவகாரம் நட்புறவில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தாது சீனா சொல்கிறது

தினத்தந்தி  தினத்தந்தி
என்எஸ்ஜி, அசார் விவகாரம் நட்புறவில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தாது சீனா சொல்கிறது


பெய்ஜிங், 
48 அணுசக்தி நாடுகளின் சிறப்பு பட்டியலில் உறுப்பினர் ஆவதற்கு இந்தியாவிற்கு ரஷியா, அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்தாலும் சீனா மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா இணைவதில் தடங்கல் ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு தடை விதிக்கும் விவகாரத்திலும் சீனா ஐ.நா.வில் இந்தியாவின் முயற்சிக்கு தடையை ஏற்படுத்தி உள்ளது. 
இவ்வாறு பாகிஸ்தானுக்கு கொடிபிடிக்கும் சீனா இந்தியாவிற்கு முட்டுக்கட்டையிடுவதையே முதன்மையாக கொண்டு உள்ளது. 
இந்தியா மற்றும் வியட்நாம் பாதுகாப்பு துறையில் நட்புறவை விஸ்தரிப்பதிலும் சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில் இந்தியா என்எஸ்ஜியில் உறுப்பு நாடாவது மற்றும் ஐ.நா.வில் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் வேறுபாடு நிலவினாலும் மேம்பட்டு வரும் நட்புறவில் முட்டுக்கட்டை ஏற்படுத்தாது என சீனா கூறிஉள்ளது. 
இருதரப்பும் முக்கியமான நலன்கள் மற்றும் முக்கிய கவலைக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று சீனா கூறிஉள்ளது. 
டெல்லியில் 69 நாடுகள் பங்கேற்கும் ‘ரெய்சினா டயலாக்’ மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானை எச்சரிக்கும் விதமாக பேசினார். சீனாவை குறிப்பிட்டு பேசுகையில் “முன்னெப்போதுமில்லாத பொருளாதார வாய்ப்பை,” இருதரப்பும் ஏற்படுத்தி உள்ளது என்றார். பிரதமர் மோடியின் இப்பேச்சை பாராட்டிஉள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹவா சங்யிங், இருதரப்பும் வலிமையான ஒத்துழைப்பை கொண்டிருக்கவேண்டும் என்பது முக்கியமானது என்றார். மேலும் இருதரப்பு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். 
 இந்தியா என்எஸ்ஜியில் உறுப்பு நாடாவதற்கு தடை விதிப்பு மற்றும் ஐ.நா.வில் மசூத் அசாருக்கு தடை விதிப்பு ஆகிய விவகாரங்களில் இந்தியாவின் கவலை தொடர்பான கேள்விக்கு ஹவா சங்யிங் பதிலளிக்கையில் இருபிரச்சனையும் பலதரப்பு பிரச்சனை என்று மழுப்பிஉள்ளார். இப்பிரச்சனையில் ஒருவர் மீது கையை காட்டுவதைவிட, இருதரப்பும் பிறருடைய நிலையை புரிந்துக் கொள்ளவேண்டும் என்று கூறிஉள்ளார். “இருதரப்பும் மற்றவர்களின் நிலையை புரிந்துக் கொள்ளவேண்டும் என்று நான் நினைக்கின்றேன். இருதரப்பும் அடிப்படை நிலைப்பாட்டின்படி இருதரப்பு நலன்களுக்கு மதிப்பளிக்கவேண்டும். நாம் பொதுவான கருத்தையும் கொண்டிருக்கிறோம், நம்மிடம் வேறுபாடும் உள்ளது,” என்று கூறிஉள்ளார். 
இருதரப்பும் நட்பு ரீதியில் முக்கிய பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் சீனா குறிப்பிட்டு உள்ளது. 

மூலக்கதை