5 மாநில சட்டமன்ற தேர்தசோனியா பிரசாரம் செய்வாரா? திக்விஜய் சிங் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
5 மாநில சட்டமன்ற தேர்தசோனியா பிரசாரம் செய்வாரா? திக்விஜய் சிங் பேட்டி

பனாஜி  - உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா பிரசாரம் செய்வாரா என்பது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் பேட்டி அளித்தார். உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இதில் முக்கியமாக உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இம்மாநிலங்களில் மிகப் பெரிய வெற்றியை எதிர்பார்த்து அக்கட்சி களத்தில் இறங்கியுள்ளது.


உத்தரபிரதேசத்தில் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே ஷீலா தீட்சித், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோருடன் சோனியா பிரசாரத்தில் ஈடுபட்டார். வாரணாசியில் பேரணியில் கலந்து கொண்ட போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது குணம் அடைந்துள்ளார்.



இதற்கிடையே, குடியரசுதின விழாவில் கூட சோனியா பங்கேற்கவில்லை. அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு ஓய்வில் இருந்தபடியே தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தற்போது ராகுல்தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் நடக்கும் போராட்டங்களும் ராகுல் தலைமையிலேயே நடைபெற்று வருகிறது.

இ்ந்த சூழலில் 5 மாநில தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிடம் கேட்ட போது, ‘‘ராகுல் காந்தி 5 மாநிலங்களிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்.

சோனியா பிரசார திட்டம் குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சியின் உயர்மட்ட குழு  முடிவு செய்யும்.

இருந்த போதிலும் உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சோனியா பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றார்.

.

மூலக்கதை