6 மணிக்குள் அனுமதி, இல்லாவிட்டால் 50 அதிமுக எம்.பிக்களும் விலக வேண்டும்- அலங்காநல்லூர் மக்கள் கெடு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
6 மணிக்குள் அனுமதி, இல்லாவிட்டால் 50 அதிமுக எம்.பிக்களும் விலக வேண்டும் அலங்காநல்லூர் மக்கள் கெடு

சென்னை: ஜல்லிக்கட்டு என்றாலே உலக மக்கள் அனைவரின் நினைவிற்கும் வருவது அலங்காநல்லூர். தை பொங்கலை முன்னிட்டு 3வது நாள், காணும் பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இதற்காகவே வாடிவாசல் அலங்கரிக்கப்படும்.

வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிப்பார்கள். உச்சநீதிமன்ற தடையினால் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.

தமிழக மக்களின் பாராம்பரிய மிக்க ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கடந்த 3வது நாளாக பொதுமக்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை அலங்காநல்லூரில் மூன்றாவது நாளாக மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி கோரியும், ஏற்கனவே கைது செய்தவர்களை விடுவிக்க கோரியும் போராட்டம் நடைபெறுகிறது. மேலும் மதுரை தமுக்கம் மைதானத்திலும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட நாள் விடுமுறைக்கு பிறகு இன்று கல்லூரிகள் தொடங்கிய நிலையில் தமிழகத்தின் எல்லா கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே ஜல்லிக்கட்டு நடைபெற அரசு நடவடிக்கை எடுக்கப்படாவில்லை, மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப் போவதாக அலங்காநல்லூர் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடையடைப்பு, மறியல் போராட்டம் நடத்தவும் மக்கள் முடிவு செய்துள்ளனர். நாளைய தினம் குடியரசுத்தலைவரை தமிழக எம்.பிக்கள் சந்திக்கப் போவதாக தகவல் வெளியானது.

இது வெறும் கண்துடைப்புதான் என்று கூறும் அலங்காநல்லூர்வாசிகள் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும் என்று கூறியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்ற வேண்டும் என்றும், 6 மணிக்குள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், அதிமுக எம்.பிக்கள் 50 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அலங்காநல்லூரில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மூலக்கதை