வெளிநாட்டுக்காக வேலை பார்த்தாலும்… நாங்களும் தமிழர்கள் தான்.. வீதி இறங்கி போராடும் ஐடி இளைஞர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெளிநாட்டுக்காக வேலை பார்த்தாலும்… நாங்களும் தமிழர்கள் தான்.. வீதி இறங்கி போராடும் ஐடி இளைஞர்கள்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பிற்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி மனித சங்கிலிப் போராட்டத்தில் தரமணியில் உள்ள ஐடி நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கல் திருவிழாவிற்கு முன் தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், பொங்கல் முடிந்தும் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சென்னையில் மெரினாவில் நேற்று காலையில் கூடிய மாணவர்கள் தொடர்ந்து பல மணி நேரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதேபோன்று இன்று காலை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தன்னெழுச்சியாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை நடத்தினார்கள். இவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தரமணியில் உள்ள ஐ டி நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தன்னெழுச்சியாக ஒன்று கூடி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பங்கேற்ற ஐடி பெண் ஊழியர், ஜெர்சி மாடு உள்ளிட்ட வெளிநாட்டு மாடுகளில் பால் குடித்ததால்தான் தனக்கு சர்க்கரை நோய் சிறுவயதிலேயே வந்து விட்டது என்றும், நாட்டு மாடுகளின் இனத்தைக் காப்பாற்ற நாம் போராடுவது மிக மிக அவசியம் என்று கூறினார்.

இதேபோன்று வெளிநாட்டுக்காக நாங்கள் வேலை செய்தாலும், தமிழ் மற்றும் தமிழர்களுக்கு ஒன்று என்றால் வீதியில் இறங்கி போராடுவோம் என்று ஐடி ஊழியர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ டி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மூலக்கதை