அப்போ ஹிந்தி.. இப்போ ஜல்லிக்கட்டு.. மொழி, கலாசாரத்திற்காக போராடும் உலகின் ஒரே இனம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அப்போ ஹிந்தி.. இப்போ ஜல்லிக்கட்டு.. மொழி, கலாசாரத்திற்காக போராடும் உலகின் ஒரே இனம்!

சென்னை: ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு மாபெரும் மக்கள் இயக்கம் தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஹிந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் 1965ம் ஆண்டு தமிழகமே பற்றி எரிந்தது. ஜல்லிக்கட்டு விவகாரம் போலவே, அப்போதும், மாணவர்கள் முன்னின்று நடத்திய அந்தப் போராட்டத்தில் பலர் உயிர் நீத்தனர். போராட்டத்தை அடக்க இந்திய ராணுவம் தமிழகம் வரவழைக்கப்பட்டது.

மொழியைப் பாதுகாக்க நடைபெற்ற ஒரு போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களத்தில் இறங்கியதும், அந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன என்பதும் உலக வரலாற்றில் வேறெங்கும் இல்லாதது. எனவேதான் தமிழகத்தின், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி நினைத்தாலே வட இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் நடுக்கம் ஏற்படுவது வழக்கம்.

அனைத்துப் பள்ளிகளிலும் ஹிந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 1938ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து, அதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலின்படி போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்ட நடராசனின் உடல் நலம் குன்றியது. மன்னிப்புக் கோரி கடிதம் எழுதித் தந்தால் விடுதலை செய்வதாக அரசு கூறியபோதும், மன்னிப்புக் கேட்க மறுத்து தீரத்தோடு போராடிய, நடராசன், 1939ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி உயிரிழந்தார்.

நடராசன்தான் மொழிப் போராட்டத்தின் முதல் உயிர் பலி. இந்நிலையில், அதே ஆண்டு மார்ச் 12ம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து சென்னை சிறையில் உயிர் நீத்தார். இதனால் போராட்டம் தீவிரமடையவே, ஹிந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணையை 1940ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி அரசு திரும்பப் பெற்றது. அடுத்து, 1948ல் ஓமந்தூரார் தமிழக முதல்வராக இருந்தபோது ஹிந்தி கட்டாய பாடமாக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மீண்டும் போராட்டம் வெடித்ததால், அரசு பின்வாங்கியது.

இருப்பினும், 1965ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் இந்திய ஆட்சி மொழியாக ஹிந்தி மட்டுமே இருக்கும் என்ற 1963ம் ஆண்டின் ஆட்சி மொழி சட்ட மசோதாவால் மீண்டும் போராட்டம் உருவானது. மாணவர் கிளர்ச்சி, உயிர் பலி என நீடித்த இந்த மாபெரும் போராட்டத்தால்தான், 1967ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு திமுக ஆட்சியைப் பிடித்தது. இதுவரை காங்கிரசால் தமிழக ஆட்சியை பிடிக்க முடியாமல் தேய்ந்து கொண்டே செல்ல ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்தான் வித்திட்டது. மாபெரும் தலைவராக போற்றப்பட்ட காமராஜரையே, மாணவர் தலைவரான பெ. சீனிவாசன் தோற்கடித்தார் என்றால் ஹிந்தி எதிர்ப்பின் ஆழம் எளிதில் புரியும்.

இப்படி மொழியை காக்க ஒன்றுகூடிய தமிழினம், அதிலும் குறிப்பாக மாணவர் இனம் இப்போது மீண்டும் கூடியுள்ளது. உலகிலேயே மொழிக்காக பெரும் போராட்டங்களை நடத்திய ஒரே இனம் என்று வரலாற்று சாதனை படைத்த தமிழினம் இப்போது தனது பண்பாடு, கலாசாரம், கலை ஆகியவற்றை காக்க ஒன்றிணைந்துள்ளது. இதுவும் உலகில் எங்கும் காணக்கிடைக்காததுதான்.

என்னதான் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்ந்தாலும் தமிழர்களின் ஆழ்மனதில், அவர்களின் மரபணுக்களில், இந்த உலகின் மூத்த குடிமக்கள் என்ற பெருமிதம் எங்கோ ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த அடிப்படைக்கே ஆபத்து வரும்போது, தன்னையறியாமலேயே தமிழினம் ஒன்று கூடுகிறது. வழிகாட்ட ஆளில்லாவிட்டாலும் ஆவேசமாக எதிரேவரும் தடைகளை மோதி உடைத்து எறிந்து முன்னேறுகிறது.

குடிக்க தண்ணீர் கிடைக்காது என்ற பிரச்சினை வரும்போது, அணு உலையால் உயிருக்கே ஆபத்து எனும்போது கூட ஒன்றாக போராட தமிழினம், தனது பண்பாடு, கலாசாரத்திற்கு ஒரு ஆபத்து வரும்போது ஒரே நேர்கோட்டில் பயணிப்பது குறித்த சூட்சுமம், வரலாற்று ஆய்வாளர்களால் ஆராயப்பட வேண்டியது என்பது உண்மை.

மூலக்கதை