ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை அடித்து தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த போலீஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை அடித்து தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த போலீஸ்

சென்னை: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் வெடித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் சார்பில் சென்னை மெரினா கடற்கறையில் நேற்று காலை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 40 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மெரினா கடற்கறைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதேபோல விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சோழிங்கநல்லூரில் உள்ள ஜேப்பியார் குழும கல்லூரி மாணவர்கள் ஜங்சன் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர்.

மாணவர்கள் பழைய மகாபலிபுரம் சாலையில் தொடர்ந்து அமர்ந்திருக்கவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. மாணவர்கள் சிதறி ஓடியதால் அந்த இடம் போர்க்களமாக காட்சியளித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தர தரவென இழுத்துச் சென்று போலீசார் கைது செய்ததாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீசாரின் செயலுக்கு மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி நடத்தியது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினர்.

அலங்காநல்லூரில் தடியடி நடத்தி கைது செய்ததால் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில் சோழிங்கநல்லூரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.

மூலக்கதை