ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? நாளை 2வது போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? நாளை 2வது போட்டி

கட்டாக்: இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின், 2வது போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நாளை நடைபெறுகிறது. புனேவில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 351 ரன் இலக்கை துரத்திய இந்தியா ஒரு கட்டத்தில் 63 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது.

ஆனால் 5வது விக்ெகட்டுக்கு கேப்டன் விராட் கோஹ்லி-கேதர் ஜாதவ் குவித்த 200 ரன் உதவியால் இந்தியா வெற்றி பெற்றது. விராட் கோஹ்லி 122, கேதர் ஜாதவ் 120 ரன் எடுத்தனர்.

இவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதுடன், அனுபவம் நிறைந்த டோனி, யுவராஜ் சிங், ஷிகார் தவான், லோகேஸ் ராகுல் ஆகியோரும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவது அவசியம்.

விராட் கோஹ்லிக்கு புதிய திட்டம் - சிறப்பான பார்மில் உள்ள விராட் கோஹ்லியை விரைவாக ஆட்டமிழக்க செய்தால் மட்டுமே இங்கிலாந்து வெற்றியை பற்றி சிந்திக்க முடியும்.

இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் கூறுகையில், ‘சேஸிங் என்று வந்து விட்டதால், விராட் கோஹ்லிதான் சிறந்த வீரர். அவரது சாதனைகள் அதை உறுதிபடுத்துகின்றன.

அவரை ஆட்டமிழக்க செய்ய இங்கிலாந்து பவுலர்கள் திட்டம் வகுக்க வேண்டும்’ என்றார். இது குறித்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேக் பால் கூறுகையில், ‘நம்ப முடியாத வகையில் விராட் கோஹ்லி சிறந்த வீரர்.

ஒரு நாள் தொடரை மிகவும் சிறப்பாக தொடங்கியுள்ளார். அவரை ஆட்டமிழக்க செய்ய சில திட்டங்களை வைத்துள்ளோம்.

2வது போட்டியில் அவருக்கு ‘ஷார்ட் பால்’ வீச முடிவு செய்துள்ளோம்’ என்றார்.
 
டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் : முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது.

2வது போட்டியிலும் இந்தியா டாஸ் வெல்லும் பட்சத்தில் முதலில் பவுலிங்கைதான் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பனி.

பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பவுலிங் செய்வது சிரமம். ஆனால் கட்டாக்கில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாக, மைதான பொறுப்பாளர் பங்கஜ் பட்நாயக் கூறியுள்ளார்.

இந்த போட்டி மதியம் 1. 30 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5. 30 மணியளவில் பனிப்பொழிவு தொடங்கி விடும்.

எனினும் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
2 ஆண்டுகளுக்கு பின்னால் - கட்டாக் பாரபட்டி மைதானத்தில் கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி ஒரு நாள் போட்டி நடந்தது.

இதில், 5 விக்கெட் இழப்புக்கு 363 ரன் குவித்த இந்தியா, 169 ரன் வித்யாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுதான்.

இங்கு இதுவரை மொத்தம் 19 போட்டிகள் நடந்துள்ளன. இதில், 17 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 11ல் வெற்றி பெற்றுள்ளது.

2 போட்டிகள் கைவிடப்பட்டன. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இம்மைதானத்தில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளன.

இதில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஜிம்பாப்வேவுக்கு எதிராக 1998ம் ஆண்டு இந்தியாவின் முகமது அசாரூதின் ஆட்டமிழக்காமல் 153 ரன் குவித்தது இம்மைதானத்தில் தனி நபர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாக உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக 2007ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் பாவெல் 27 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்து வீச்சாக உள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு : கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் இங்கு நடந்த டி20 போட்டி ஒன்றில் இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.

இதில், மோசமாக விளையாடிய இந்தியா 92 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 6 விக்கெட் வித்யாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் தண்ணீர் பாட்டில்களை வீசி ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

உலக அளவில் இந்திய கிரிக்கெட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, நாளை நடக்கவுள்ள போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இம்முறை தண்ணீர் பாட்டில்கள் அனுமதிக்கப்படாது.

கேலரிகளுக்கு முன்பாக 50 அடி உயரத்தில் வலைகள் கட்டப்பட்டுள்ளன. 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

போலீசார் தவிர 1500 பாதுகாவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.  
 
தொடரை கைப்பற்றுமா? : இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விட்டால், 2-0 என தொடரை கைப்பற்றி விடும்.

தொடரை இழக்கும் அபாயத்தில் உள்ளதால், இங்கிலாந்து அணியும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

.

மூலக்கதை