எம்ஜிஆர் பெயரில் மாமனிதர் விருது!- சித்ரா லட்சுமணன் கோரிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எம்ஜிஆர் பெயரில் மாமனிதர் விருது! சித்ரா லட்சுமணன் கோரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் பிறந்த தினத்தன்று அவரது பெயராலே மா மனிதர் விருது வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வருக்கு சித்ரா லட்சுமணன் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

புரட்சி நடிகர் என்றும் புரட்சித் தலைவர் என்றும் தமிழக மக்களால் பாசத்தோடு அழைக்கப்படுகின்ற எம் ஜி ஆர் அளவிற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்த நடிகர்-தலைவர் எவரும் இல்லை. மக்களால் அந்த அளவிற்கு நேசிக்கப்பட்டதால்தான் தமிழ் சினிமாவை முப்பதாண்டு காலமும் தமிழ் நாட்டை பதினொரு ஆண்டு காலமும் அவரால் ஆள முடிந்தது. காலம் அவரது உயிரைப் பறிக்காமல் இருந்திருந்தால் எக்காலத்திலும், எவராலும் எம்ஜிஆரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கியிருக்கவே முடியாது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இன்றும் தமிழக மக்களில் பலர் தங்களை வாழவைக்க அவதரித்த கடவுளாகவே எம் ஜி ஆர் அவர்களைப் பார்ப்பதால்தான் பூஜை அறையில் அவரது படத்தை வைத்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர்.

நான் தயாரித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவிலே கலந்து கொண்டு சிறப்பித்த புரட்சித் தலைவரோடு பல சந்தர்ப்பங்களில் மிகவும் நெருக்கமாக பழகுகின்ற வாய்ப்பை இறைவன் எனக்கு அளித்ததை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்

இன, மத, கட்சி வேறுபாடின்றி எல்லோராலும் மதிக்கப்படுகின்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சேவை மனப்பான்மையுள்ள ஒரு நல்ல மனிதரைத் தேர்ந்தெடுத்து 'எம்ஜிஆர் மா மனிதர் விருது' என்று பெயரிலே ஒரு விருது தர வேண்டும் என்றும் அந்த விருது வழங்கும் விழாவை ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் அவர்களின் அவரது பிறந்த நாளான ஜனவரி பதினேழாம் தேதி மிகப்பெரிய விழாவாக தமிழக அரசின் சார்பில் கொண்டாட வேண்டும் என்றும் தங்களை அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்," என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை