ஆளும் காங்கிரசில் இருந்து கட்சி மாறி வந்தவர்களுக்கு சீட் - உத்தரகண்ட் பாஜவில் அதிருப்தி பலர் சுயேச்சையாக களமிறங்க திட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆளும் காங்கிரசில் இருந்து கட்சி மாறி வந்தவர்களுக்கு சீட்  உத்தரகண்ட் பாஜவில் அதிருப்தி பலர் சுயேச்சையாக களமிறங்க திட்டம்

டேராடூன் - உத்தரகண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட  காங்கிரசில் இருந்து கட்சிமாறி வந்தவர்களுக்கு அதிக சீட் தரப்பட்டுள்ளதால் கட்சியினரிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்கு பிப்ரவரி 15ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற  உள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 64 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை  பாஜ அறிவித்துள்ளது.

இந்த வேட்பாளர்களில் 20 பேர் வரை காங்கிரசில் இருந்து  கட்சி மாறி பாஜவுக்கு வந்தவர்கள். இந்த தொகுதிகளில் ஏற்கனவே சீட் எதிர்பார்த்து காத்திருந்த பாஜ நிர்வாகிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அவர்கள் கடும்  அதிருப்தியடைந்துள்ளனர். அவர்களில் பலரும் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.

நரேந்திர நகர் தொகுதியில் சீட் கிடைக்கும் என்று பாஜ முன்னாள் எம்எல்ஏ ஓம்கோபால் ராவத் நம்பியிருந்தார்.

ஆனால், அத்தொகுதி வேட்பாளராக காங்கிரசில் இருந்து வந்த சுபோத்  உனியாலை பாஜ மேலிடம் அறிவித்து விட்டது. இதனால், தான் சுயேச்சையாக களமிறங்கப்  போவதாக ஓம்கோபால் ராவத் அறிவித்துள்ளார்.

கேதார்நாத் தொகுதியில் காங்கிரசில் இருந்து வந்த ஷைலாராணி ராவத்துக்கு சீட் அளிக்கப்பட்டதால்,  பாஜ பிரமுகர் ஆஷா நவ்டியால் கடும் அதிருப்தியடைந்துள்ளார். கோட்துவார் தொகுதியில் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த பாஜ முன்னாள் எம்எல்ஏ ஷைலேந்திர சிங், அந்த வாய்ப்பு  காங்கிரஸில் இருந்து வந்த ஹரக் சிங் ராவத்துக்குச் சென்று விட்டதால் கடும்  அதிருப்தியில் உள்ளார்.

இதேபோல், ரூர்க்கி உள்பட பல தொகுதிகளில் காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு பாஜவில் சீட் தரப்பட்டுள்ளதால், பாஜவில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இது தேர்தலில் பாஜவுக்கு பின்னடைவைத் தரும் என கூறப்படுகிறது.



.

மூலக்கதை