38 பேருக்கு முலாயம் சிபாரிசு - சமாஜ்வாடி வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பு; காங்கிரசுக்கு 100 சீட் ஒதுக்கீடு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
38 பேருக்கு முலாயம் சிபாரிசு  சமாஜ்வாடி வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பு; காங்கிரசுக்கு 100 சீட் ஒதுக்கீடு?

புதுடெல்லி - உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகவுள்ளது. மகன் அகிலேஷை எதிர்க்க புது கட்சி தொடங்க விரும்பாத முலாயம்சிங், தனது தீவிர ஆதரவாளர்கள் 38 பேருக்கு சீட் தருமாறு அகிலேஷிடம் பரிந்துரைத்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 11ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவராக இருந்த முலாயம்சிங் கடந்த மாதம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

அதில், முதல்வர் அகிலேஷின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, அகிலேஷ் தனியாக 235 வேட்பாளர்களை அறிவித்தார்.

இதனால் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, 2 ஆக உடைந்தது. முலாயம் தரப்பினரும், அகிலேஷ் தரப்பினரும் கட்சியின் சின்னம் தங்களுக்கு சொந்தம் என கூறி, தேர்தல் கமிஷனை அணுகினர்.

அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிதான் உண்மையானது என்று தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் கூறியது. அக்கட்சிக்கே சைக்கிள் சின்னத்தையும்  ஒதுக்கியது.

இதையடுத்து, சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதை காங்கிரஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் உ. பி. மாநில பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் நிருபர்களிடம் கூறும்போது, “கூட்டணி முடிவு செய்யப்பட்டு  விட்டது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை இது பற்றி ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும்” என்றார். எனினும், கூட்டணியில் காங்கிரசுக்கு 100 சீட் தர வேண்டுமென அக்கட்சி கோரியதாகவும், சமாஜ்வாடி அதற்கு ஒப்புக் கொண்டதாகவும் பேசப்படுகிறது.

 

இந்நிலையில், ஆரம்பத்தில் அகிலேஷ் கட்சியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்து வந்த முலாயம் தற்போது அதிலிருந்து பின்வாங்கி விட்டார். அவர் அகிலேஷிடம் தனது தீவிர ஆதரவாளர்கள் 38 பேருக்கு சீட் தருமாறு சிபாரிசு செய்துள்ளார்.

வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக கட்சியின் பொது செயலாளர் ராம்கோபால் யாதவுடன் அகிலேஷ் நேற்று மாலை ஆலோசித்தார். இதைத் தொடர்ந்து இன்று மாலையில் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட அகிலேஷ் திட்டமிட்டுள்ளார்.


.

மூலக்கதை