ராணுவ நலநிதி திட்டம் அறிமுகம்; அமைச்சர்கள் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வழங்குவார்கள் - தெலங்கானா முதல்வர் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராணுவ நலநிதி திட்டம் அறிமுகம்; அமைச்சர்கள் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வழங்குவார்கள்  தெலங்கானா முதல்வர் அறிவிப்பு

ஐதராபாத் - நாட்டிலேயே முதன்முறையாக ராணுவ வீரர்களுக்கென தனியாக நலநிதி திட்டம் தெலங்கானாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிதிக்கு ஆண்டுதோறும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நிதி வழங்குவார்கள் என முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.

தெலங்கானா குளிர்கால சட்ட பேரவை கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் பேசுகையில், ‘‘நாட்டிலேயே முதன்முறையாக ராணுவ நல நிதி உதவி திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது’’ என்றார்.

இத்திட்டம் ரூ. 80 கோடி வைப்பு நிதியுடன் தொடங்கப்பட்டுள்ளது என்றும், ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ரூ. 25 ஆயிரம் ராணுவ நல நிதிக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எம்எல்ஏக்கள், மேல் சபை உறுப்பினர்கள், எம்பிக்கள் ஆகியோரும் ஆண்டுதோறும் ரூ. 10 ஆயிரம் அளிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த நிதியின் மூலம் ராணுவத்தில் பணியில் உள்ள மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தேவையான நல திட்ட உதவிகள் செய்து கொடுக்கப்படும்.

அதே போல் ராணுவ வீரர்களின் மனைவிகளின் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு வரி விலக்கு அளித்தும் அறிவித்துள்ளார்.

எல்லையில் வீரர்களுக்கு தரமற்ற உணவு மற்றும் பட்டினியோடு பணியாற்றுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் பரபரப்பு நிலவி வரும் வேளையில் சந்திரசேகரராவின் இந்த அறிவிப்புக்கு ராணுவத்தினர் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

.

மூலக்கதை