ஜூலையில் ஓய்வு பெறவுள்ள பிரணாப்புக்கு கலாம் வசித்த பங்களாவை ஒதுக்க முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜூலையில் ஓய்வு பெறவுள்ள பிரணாப்புக்கு கலாம் வசித்த பங்களாவை ஒதுக்க முடிவு

புதுடெல்லி - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிகிறது. இந்நிலையில், ஓய்வுக்கு பின் அவருக்கு அப்துல் கலாம் வசித்த பங்களாவை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர் தனது ஓய்வு காலத்தை டெல்லியில் கழிக்க முடிவு செய்திருக்கிறார்.

இதனால், அவருக்கு புதுடெல்லியில் ராஜாஜி மார்க் பகுதியில் அமைந்திருக்கும் 10ம் எண் அரசு பங்களாவை ஒதுக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த பங்களாவில்தான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஓய்வு பெற்ற பிறகு கடைசி காலம் வரை வசித்து வந்தார்.

எனவே, தற்போது இந்த பங்களாவில் குடியிருக்க ஜனாதிபதி பிரணாப் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரணாப், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராக பதவிகளை வகித்தவர்.

பிரணாப் முகர்ஜியின் சொந்த மாநிலம் மேற்கு வங்கம் ஆகும். குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 75 ஆயிரம் கிடைக்கும்.

ஒரு கார், 2 டெலிபோன் இணைப்புகள், ஒரு செல்போன் இணைப்பு ஆகியவையும் வழங்கப்படும். அவருக்கு உதவியாக ஒரு தனிச்செயலாளர் உள்பட 5 ஊழியர்களும் நியமிக்கப்படுவார்கள்.

விமானத்திலும், ரயிலிலும் மனைவியுடன் இலவசமாகவே பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை