ஜல்லிக்கட்டு.. அமைதியாக போராடிய சென்னை மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. போர்க்களமானது ஓ.எம்.ஆர் சாலை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜல்லிக்கட்டு.. அமைதியாக போராடிய சென்னை மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. போர்க்களமானது ஓ.எம்.ஆர் சாலை

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி சென்னையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

மெரீனா கடற்கரையில லட்சக்கணக்காண மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலையில் பழைய மகாபலிபுரம் சாலை உள்ள ஜேப்பியார் குழும கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய மகாபலிபுரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார், மாணவர்களையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கலைந்து போகுமாறு கூறினார்.

ஆனால் மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சோழிங்கநல்லூர் சந்திப்பில் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே, கூட்டத்தைக் கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர்.

போலீசாரின் தாக்குதலை அடுத்து மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் பழைய மகாபலிபுரம் சாலையே போர்க்களமாக காட்சியளித்தது. கலைந்து செல்லாத மாணவர்களை சிலரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சோழிங்கநல்லூரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

படங்கள்: பிரபு

மூலக்கதை