சென்னையில் மாணவர்கள் மீது போலீஸ் கொடூர தடியடி- வேல்முருகன் கடும் கண்டனம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னையில் மாணவர்கள் மீது போலீஸ் கொடூர தடியடி வேல்முருகன் கடும் கண்டனம்

சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி போராடிய மாணவர்கள் மீது போலீசார் கொடூர தடியடி நடத்தியுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக பல லட்சம் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் அமைதிவழி கிளர்ச்சி பெருநெருப்பாக பற்றி எரிந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையிலும் (ஓஎம்ஆர்) மாணவர்கள், இளைஞர்கள் பெருந்திரளாக இன்று திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். இத்தடியடியால் நாலாபுறமும் மாணவர்கள், இளைஞர்கள் சிதறி ஓடினர். அப்பகுதியே போர்க்களமாக இருக்கிறது.

இந்த தடியடிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் இதேபோல் தடியடி நடத்தியதால் இப்போது தமிழகம் போர்க்களமாக இருக்கிறது. இத்தகைய தடியடி, கைது நடவடிக்கைகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றார் வேல்முருகன்.

மூலக்கதை