தீபா எங்களுடன் வந்து இணைவார் தீபா, தீபக் எங்கள் பிள்ளைகள் ம.நடராசன் சொல்கிறார்

தினத்தந்தி  தினத்தந்தி
தீபா எங்களுடன் வந்து இணைவார் தீபா, தீபக் எங்கள் பிள்ளைகள் ம.நடராசன் சொல்கிறார்


தஞ்சாவூர்,

தஞ்சையில் புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன் இன்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாது:-

தமிழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாக கலை இலக்கிய விழா நடத்தி வருகிறோம். முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் எங்கள் குடும்பம் மட்டுமின்றி தமிழக மக்களும் துயரத்தில் உள்ளனர்.எனவே இந்த ஆண்டு  கலை இலக்கிய விழா நடத்த வேண்டுமா? என நினைத்தோம். மக்களின் வேண்டு கோளை ஏற்று விழாவை நடத்தினோம். எப்போதும் 3 நாட்கள் தான் விழா நடத்துவோம். இந்த ஆண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்பதால் 4 நாட்கள் விழாவை நடத்தினோம்.

காவிரியில் தண்ணீர் இல்லாததால் டெல்டா விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். டெல்டா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. காவிரியில் தண்ணீர் திறந்து விட உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காமல் துரோகம் செய்து விட்டது. மேலும் முல்லைப்பெரியாறு பிரச்சினையும் உள்ளது. இது அடுக்கு மேல் அடுக்கு பிரச்சினையாக உள்ளது.

இதனை பார்க்கும் போது நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா அல்லது தனித்து விடப்பட்டோமா என்ற எண்ணத் தோன்றுகிறது. சென்னையில் புயல் பாதிப்பால் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனை மாநில அரசு ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரணம் வழங்க வில்லை.

சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது நல்ல பலமான கருவி, ஆட்களை கொண்டு உடனடியாக தமிழக அரசு சரி செய்து தமிழக மக்களின் துயரை துடைத்தது. இந்த விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொண்டது. உதவி செய்ய முன் வரவில்லை.நான் அ.தி.மு.க.வுக்காக பேசவில்லை. தமிழக மக்களுக்காக பேசுகிறேன். மத்திய அரசு புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

காவிரி பிரச்சினையில் தமிழக மக்களுக்கு உதவி செய்யவில்லை. அதேபோல தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சினையிலும் தமிழக மக்களுக்கு மோசம் செய்து வருகிறது.தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றோடு இணைந்தது ஜல்லிக்கட்டு. பொங்கல் விழா கலாசார விழாவாகும். மனிதர்கள் மாடுகளை கடவுளாக பார்த்து கும்பிட்டு வருகிறார்கள்.ஆனால் பீட்டா வழக்கை காரணம் காட்டி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்வது நியாயம் இல்லை.

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மாணவர்களின் எழுச்சியை நான் பாராட்டுகிறேன்.இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜல்லிக்கட்டை நடத்த சட்டம் கொண்டு வர வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் பேச வேண்டும்.மோடி நல்லவர் தான். கட்சிக்கு அப்பாற்பட்டவர். நாளையே என்னை கைது செய்தாலும் மோடி வாழ்க என்று தான் சொல்லுவேன். எனக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. நான் எந்த அதிகாரியிடனும் பேசியது உண்டா?. ஜெயலலிதா மரணத்தை கொச்சை ப்படுத்த வேண்டாம். அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை.

 தீபா எங்களுடன் வந்து இணைவார். தீபா, தீபக் எங்கள் பிள்ளைகள். அவர்களது எதிர்காலம் எங்களுக்கு ரொம்ப முக்கியம். ஆனால் தீபாவை சிலர் பின்னால் இருந்து தூண்டி விடுகின்றனர்.  இவ்வாறு ம. நடராசன் கூறினார்.

மூலக்கதை