பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு தடையா? உலகெங்கும் பொங்கி எழும் தமிழர்கள்

தினமலர்  தினமலர்
பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு தடையா? உலகெங்கும் பொங்கி எழும் தமிழர்கள்

சிகாகோ: ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரி, தமிழகம் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் தமிழர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் வகையில் அமெரிக்காவில் உள்ள ரிச்மாண்ட் என்ற இடத்தில், மலைசாமி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பதாகைகளை தாங்கி, வலியுறுத்தினர். சிகாகோவில் அறம் அமைப்பின் சார்பில் ஏராளமானோர் குடும்பத்துடன் தங்கள் ஆதரவை பதிவு செய்தனர்.

உலக மக்கள் ஆதரவு :


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள தமிழர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, ஹாங்காங், துபாய், இங்கிலாந்து, மெக்சிகோ, அயர்லாந்து, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், உக்ரைன், தென்னாப்பிரிக்கா, சீனா, உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வழக்கமான பொங்கல் கொண்டாட்டத்தின் போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தங்களின் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.

பீட்டாவுக்கு தடை வேண்டும் :


ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்றக் கோரியும், இப்பிரச்னைக்கு காரணமான பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரியும் பதாகைகளுடன் அவர்கள் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தை போலவே, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வரை இப்போராட்டத்தை தொடர போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டங்களில் பெண்கள், குழந்தைகள் என ஒட்டு மொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டு, ஜல்லிக்கட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் போராட்டம் :


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் வகையில் அமெரிக்காவில் உள்ள ரிச்மாண்ட் என்ற இடத்தில், மலைசாமி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் பதாகைகளை தாங்கி, வலியுறுத்தினர். இது குறித்து மலைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மாகாணத்தின் ரிச்மாண்டில் வாழும் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கூறி, ஜல்லிக்கட்டிற்கு தங்கள் ஆதரவைப் பதிவு செய்தார்கள். தமிழர்களின் உணர்வுகளுக்கும் பண்பாட்டிற்கும் மதிப்பளித்தும், தமிழ்நாட்டின் உள்ளூர் மாட்டினங்களை அழிவில் இருந்து தடுப்பதற்காகவும் ஜல்லிக்கட்டை வரைமுறைப் படுத்தி நடத்துமாறு கூறி கூடினார்கள். இந்தக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு தடையினால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும், இதில் விளையாடிக்கொண்டிருக்கும் பெரும் அரசியலையும் ஆதரவாளர்கள் கூட்டத்தினருக்கு விளக்கினார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை