ஜல்லிக்கட்டுக்காக 3வது நாளாக நீடிக்கும் போராட்டம்

தினமலர்  தினமலர்
ஜல்லிக்கட்டுக்காக 3வது நாளாக நீடிக்கும் போராட்டம்

சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆதரவு பெருகிற வருகிறது. போராட்டத்தில் கல்லூரி மாணவர்களை தொடர்ந்து பள்ளி மாணவர்களும் களம் இறங்கி வருகின்றனர்.

இளைஞர்கள் உறுதி :


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை- அலங்காநல்லூரில் 3வது நாளாகவும், சென்னை, நெல்லை, கோவை, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் 2வது நாளாகவும் கல்லூரி மாணவர்களும், சமூக வலைதளங்கள் மூலம் இணைந்த இளைஞர்கள் ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டை இந்த ஆண்டே நடத்த வேண்டும், பீட்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடக்கும் வரை கல்லூரிக்கு செல்ல மாட்டோம் என கல்லூரி மாணவர்கள் கூறி வந்த நிலையில், தற்போது பள்ளி மாணவர்களும் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை பள்ளிக்கு செல்ல மாட்டோம் என கூறி வருகின்றனர்.

அமைச்சர்கள் வாக்குறுதி :


சென்னை மெரீனாவில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் மற்றும் ஜெயக்குமார் அழைத்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும். அவசர சட்டம் கொண்டு வருவதற்கு பிரதமர், ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்போம். பார்லி., கூட்டத்தொடருக்கு முன்பு சட்டப்பிரிவு 27 ல் காளைகளை சேர்க்கவும் அழுத்தம் தருவோம். அவசர சட்டம் கொண்டு வராததற்கு மத்திய அரசு கூறும் காரணங்களில் தமிழக அரசுக்கு உடன்பாடில்லை. இளைஞர்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவது தான் ஒரே வழி என்றால் அதற்கும் தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவித்தனர். அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்ணதியாளர்களிடம் பேசிய போராட்ட இளைஞர்கள், முதல்வரின் அறிக்கையை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும். இருப்பினும் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.

பெருகும் ஆதரவு :


ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் ஆதரவு பெருகி வருகிறது. சென்னை, மதுரை, புதுச்சேரி, கோவை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தின் மீது ஏறி நின்று, இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள தமிழகர்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

வலுக்கிறது போராட்டம் :


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள், இன்று ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜனவரி 20ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். பல இடங்களில் இளைஞர்களுடன் பொது மக்கள், பெண்கள் ஆகியோரும் சாலைமறியல் நடத்தி வருகின்றனர். தொடர் சாலை மறியல் போராட்டத்தால் அலங்காநல்லூரைச் சுற்றிய 50 கிராமங்களில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை