பயங்கரவாதத்தை கைவிட்டால் பேச்சு: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி நிபந்தனை

PARIS TAMIL  PARIS TAMIL
பயங்கரவாதத்தை கைவிட்டால் பேச்சு: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி நிபந்தனை

இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டுமென்றால், பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமைதிக்கான நடவடிக்கையை இந்தியா மட்டும் எடுத்தால் போதாது, பாகிஸ்தானும் எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தில்லியில் "ரெய்சானா பேச்சுவார்த்தை' என்ற பெயரில் இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் 2-ஆவது புவி-அரசியல் மாநாடு 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
அண்டை நாடுகளுடன் அமைதி ஏற்படுத்துவதும், ஒட்டுமொத்த தெற்காசிய பிராந்தியத்திலும் நல்லிணக்கம் நிலவச் செய்வதுமே எனது தொலைநோக்கு திட்டம் ஆகும். இந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான், எனது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு (பிரதமராக பதவியேற்ற நிகழ்ச்சி) பாகிஸ்தான் உள்பட சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தேன். இதே கண்ணோட்டத்தில்தான், பாகிஸ்தானின் லாகூர் நகருக்குப் பயணம் சென்றேன். ஆனால், இந்தியா மட்டுமே அமைதி வழியில் நடக்க முடியாது. பாகிஸ்தானும் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்பினால், பயங்கரவாதத்தை அந்நாடு கைவிட வேண்டும். நமது அண்டை நாட்டில் வன்முறையை ஆதரிப்போர், வெறுப்புணர்வை பரப்புவோர், பயங்கரவாதத்தை ஊக்குவிப்போர் தனிமைப்படுத்தப்பட்டு, நிராகரிக்கப்பட வேண்டும்.
இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் ஒட்டுமொத்த உலகம் முழுவதும் ஏராளமான பொருளாதார வாய்ப்புகள் உள்ளன; இந்த நிலையில், இரண்டு பெரிய அண்டை நாடுகளுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கையான ஒன்றே. இரண்டு நாடுகளும் தங்களிடையேயான உறவை பராமரிப்பதற்கும், இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் அபிவிருத்தியை ஏற்படுவதற்கும், பரஸ்பரம் இரண்டு நாடுகளும் பிற நாட்டின் நலன்கள், பிரச்னைகளுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்க வேண்டும்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில், அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் மற்றும் உலகின் பிற முக்கிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்தது.
டிரம்புடன் பேச்சு: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இருதரப்பு நட்புணர்வை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொண்டோம். ஸ்திரமின்மை, வன்முறை, மோதல், தீவிரவாதம், புறக்கணிப்பு, எல்லை கடந்த அச்சுறுத்தல்கள் ஆகியவை அபாயகரமான அளவுக்கு தற்போது அதிகரித்து விட்டன. இதுபோன்ற அச்சுறுத்தல்களில், எந்த நாட்டையும் சாராதவர்களுக்கே (பயங்கரவாதிகள்) அதிக பங்களிப்புள்ளது.
வித்தியமாசமான உலகுக்கு, வித்தியாசமான உலகத்தால் அமைக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் காலாவதியாகி விட்டது போல தோற்றமளிக்கின்றன (ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளை சாடினார்). இவை அனைத்து நாடுகளும் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுப்பதற்குத் தடையாக இருக்கின்றன.
கடல்சார் விவகாரங்களில் இந்தியா, யாரையும் புறக்கணிக்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை.
சர்வதேச சட்டத்தை மதித்தல் என்ற அடிப்படையில் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாகும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
250 பிரதிநிதிகள் பங்கேற்பு: கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற முதலாவது ரெய்சானா பேச்சுவார்த்தை மாநாட்டில் 40 நாடுகளில் இருந்து 120 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல், 2-ஆவது ரெய்சானா பேச்சுவார்த்தை மாநாட்டில், நேபாள வெளியுறவு அமைச்சர் பிரகாஷ் சரண் மஹத், ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய், ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரூட் உள்பட 65 நாடுகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

மூலக்கதை