ஜல்லிக்கட்டுக்கு வலுக்கிறது ஆதரவு: மெரீனாவில் இளைஞர்கள் தொடர் போராட்டம்

PARIS TAMIL  PARIS TAMIL
ஜல்லிக்கட்டுக்கு வலுக்கிறது ஆதரவு: மெரீனாவில் இளைஞர்கள் தொடர் போராட்டம்

ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் ஆதரவு வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனாவில் 2 ஆயிரம் இளைஞர்கள் திரண்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றம் மூலம் தடை பெற்றுள்ளது. இந்த தடையை மத்திய, மாநில அரசுகள் நீக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்களும், சமூக நல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஜல்லிக்கட்டுக்குரிய தடையை நீக்கக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. இருப்பினும் ஜல்லிக்கட்டுக்குரிய தடை நீடித்து வருகிறது.
இதனால், மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தடையை மீறிய இடங்களில் போலீஸார் தடியடி நடத்தினர். இந்நிலையில், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
மெரீனாவில் போராட்டம்: இந்த நிலையில், மெரீனா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே காமராஜர் சாலையின் நடைமேடையிலும், இணைப்புச் சாலையிலும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை காலை திடீரென போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டத்தில் முதலில் குறைந்தளவு இளைஞர்களே காணப்பட்டனர். ஆனால் நேரம் செல்லச்செல்ல இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நண்பகலுக்கு பின்னர் போராட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும், பீட்டா அமைப்பை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டம் காரணமாக அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்கு கூடுதல் ஆணையர் சங்கர், இணை ஆணையர் மனோகரன் ஆகியோர் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அவர்களை போராட்ட பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் போலீஸார் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தங்களது கோரிக்கைக்கு தமிழக முதல்வரும், மத்திய அரசும் உத்தரவாதம் தரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர்.
ஸ்டாலின் வாழ்த்து: இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திமுக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து தனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அப்போது சில இளைஞர்கள், ஸ்டாலினுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல திரைப்பட நடிகர்கள் டி.ராஜேந்தர், மயில்சாமி, திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், பாடலாசிரியர் சினேகன் ஆகியோரும் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் பல முக்கிய பிரமுகர்களும் போராட்டத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே, மாலை 6 மணியையும் தாண்டி போராட்டம் தொடர்ந்ததால், அதை கைவிடுமாறு இளைஞர்களிடம் அறிவுறுத்தினர். ஆனால் இளைஞர்கள், தாங்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருப்பதாகவும், எங்களால் எந்த பிரச்னையும் வராது என போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் இணைப்பு துண்டிப்பு


மெரீனாவில் இரவு 7 மணியளவில் திடீரென அந்தப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் இருண்டு காணப்பட்டது. இதன் விளைவாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், தாங்கள் வைத்திருந்த செல்லிடப்பேசியின் டார்ச் லைட்டை அனைவரும் ஒரே நேரத்தில் எரிய வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான செல்லிடப்பேசி டார்ச் லைட் எரிந்ததினால், அந்தப் பகுதி முழுவதும் மின்விளக்குக்குரிய வெளிச்சம் கிடைத்தது. இதற்கிடையே சிறிது நேரத்துக்கு பின்னர் அந்தப் பகுதியில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்தனர்.
அதேவேளையில் மத்திய, மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என இளைஞர்கள் அறிவித்தனர். இதனால் போராட்டம் நள்ளிரவு தாண்டியும் நீடித்தது. இந்த போராட்டத்தின் காரணமாக மெரீனா கடற்கரைப் பகுதி நாள் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் போராட்டம்
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்தியவர்கள் மீது நடத்திய தடியடியைக் கண்டித்து சென்னை மெரீனாவில் நடந்ததைப் போலவே தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தர்னா: 200 பேர் கைது
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி வேலூரில் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இளைஞர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற தர்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கியது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைவிட மறுத்தனர்.
இதனைத் தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாமல் பிடிவாதமாக அதே இடத்தில் அமர்ந்திருந்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள், இளைஞர்கள் என மொத்தம் 200 பேரை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

மூலக்கதை