'கொள்ளை'! கிணறு போல் தண்ணீர் தொட்டி அமைத்து.. கண்காணிக்காத மாநகராட்சியால் தவிப்பு

தினமலர்  தினமலர்
கொள்ளை! கிணறு போல் தண்ணீர் தொட்டி அமைத்து.. கண்காணிக்காத மாநகராட்சியால் தவிப்பு

மதுரை : மதுரையில் பல பகுதிகளில் கிணறுகள் போன்று 'மெகா' தண்ணீர் தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீர் தேக்கும் நிலை தொடர்வதால், மாநகராட்சியால் முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை.
மதுரையில் வீடுகள், நிறுவனங்களுக்கு குடிநீர் வினியோகத்தில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. பல பகுதிகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான வரியை ஆறுமாதத்திற்கு ஒரு முறை செலுத்துகின்றனர். ஆனால் தண்ணீர் அந்த பகுதிகளுக்கு வருவதே இல்லை.நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் என அறிவிக்கப்பட்டும், சில இடங்களில் தினமும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாக அந்த இடங்களில் குடிநீர் வினியோகம் நடப்பதால் குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீர் பிரச்னை விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், பல பகுதிகளில் குடியிருப்புகள், வீடுகளில் கிணறு போன்று 'மெகா' குடிநீர் தொட்டிகள் கட்டப்படுகின்றன.
இத்தொட்டிகளில் வழக்கமாக இணைக்கப்படும் குடிநீர் குழாயை விட, அதிக விட்டம் கொண்ட பைப்புகள் இணைக்கப்பட்டு சில மணி நேரத்தில் இந்த 'மெகா' தொட்டிகள் நிறையும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாநகராட்சி பிளம்பர், பிட்டர்கள் துணையாக உள்ளனர்.சமீபத்தில் மேலஆவணி மூலவீதியில் உள்ள ஒரு குறுகலான சந்து பகுதியில், ஒரு குடும்பம் இது போன்று 2 குடிநீர் தொட்டி அமைத்துள்ளது. இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால், அடுத்தடுத்த பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறது.
குடிநீர் வினியோகத்தில் எவ்வளவு தண்ணீர் ஒரு வீட்டிற்கு, நிறுவனத்திற்கு வினியோகப்படுகிறது என்பதை கண்காணிக்க மீட்டர் பொருத்தும் நடைமுறையை மாநகராட்சி அமல்படுத்தினால் தான் இந்த முறைகேட்டை தடுக்க முடியும்.ஒரு தெருவில் நுாற்றுக்கணக்கான வீடுகளுக்கு கிடைக்க வேண்டிய குடிநீரை, ஒரு இணைப்பை பெற்ற ஒரு தனிநபரால் தடுக்கும் நிலை பெருகிவருவதால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் குடிநீருக்கு அலையும் நிலை ஏற்படுகிறது. மாநகராட்சி இதுதொடர்பாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூலக்கதை