ஐந்து மாநில தேர்தலால் ஆடை வர்த்தகம்...பாதிக்குமா? உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர் கவலை

தினமலர்  தினமலர்
ஐந்து மாநில தேர்தலால் ஆடை வர்த்தகம்...பாதிக்குமா? உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர் கவலை


திருப்பூர்: ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், உள்நாட்டு ஆடை வர்த்தகம் பாதிக்கும் என, திருப்பூர் பின்ன லாடை துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நாடுமுழுவதும் உள்ள மாநிலங் களுடன் வர்த்தக தொடர்பு கொண்டுள்ளன. ஆர்டர் அடிப்படையிலும், சீசனுக்கு ஏற்ப ஆடைகளை தயாரித்தும், வெளிமாநிலங்களுக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. வெளிமாநில வர்த்தகர்கள் நேரடியாக திருப்பூர் வந்தும், சிறு, குறு நிறுவனங்களிடம் ஆடைகள் கொள்முதல் செய்து கொண்டுசெல்கின்றனர்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல் லாது என்கிற அறிவிப்புக்குப்பின், வெளிமாநில வர்த்தகர்கள் நேரடி ஆடை கொள்முதல் செய்வது மிக வும் குறைந்துவிட்டது. ஆடை வர்த்தகம் பாதிப்பால், உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர்களும் குறைந்துவிட்டன. தயா ரித்து அனுப்பிய ஆடைகளுக்கான தொகையை பெறுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.
பண மறு சீரமைப்புக்குப்பின் ஏற்பட்ட பண தட்டுப்பாடு பிரச்னைகள் படிப்படியாக விலகிவருகின்றன. இந்நிலையில், உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்ரகாண்ட் ஆகிய ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பண பரிமாற்றத் துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை முடிந்து, ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயக்கத்தை துவங்க உள்ளன. தேர்தல் கட்டுப்பாடுகளால், ஐந்து மாநிலங்களுக்கான வர்த்தகம் பாதிக்கப்படும்; அம்மாநிலங்களிலிருந்து புதிய ஆர்டர் வருகை குறைவதோடு, தயாரித்து அனுப்பும் ஆடைகளுக்கான தொகையை பெறமுடியாத நிலை ஏற்படும் என, ஆடை உற்பத்தி துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
"சிஸ்மா' சங்க பொதுச்செயலாளர் பாபுஜி கூறியதாவது:பண மறு சீரமைப்பு பிரச்னைகள் விலகிவரும்நிலையில், ஐந்துமாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, பண பரிமாற்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. சம்பளம் வழங்குவதில் உள்ள சிக்கல்களால், பொங்கல் விடுமுறைக்குப்பின், உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தொழி லாளர் வருகை குறையும் என்கிற அச்சம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், வெளிமாநில தேர்தல் விதிமுறைகள், தொழில் துறையை மேலும் பாதிப்படைய செய்யும். உ.பி., ஆடை வர்த்தகத்துக்கு இதயமாக உள்ளது. அம்மாநிலத்துக்கு, திருப்பூரிலிருந்து அதிகளவு ஆடைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. அதுபோல், சுற்றுலா தளமான கோவாவுக்கும் பல்வேறுவகை ஆடைகள் அனுப்பப்படுகின்றன.
தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்படும் வரை, உ.பி., கோவா, மணிப்பூர், உத்ரகாண்ட் மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கும் ஆடைகளுக்கான தொகையை எதிர் பார்க்க முடியாது. தொழிலாளர்களை தக்கவைக்கவேண்டியுள்ளதால், தொகை பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் கூட, ஆடைகளை தயாரித்து அனுப்பவேண்டியதும் கட்டாயமாகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிந்த பின்னரே, உள்நாட்டு உற்பத்தி துறை வேகம் பெறும்.இவ்வாறு, பாபுஜி கூறினார்.

மூலக்கதை