'கோல்மால்'! தெரு மின்விளக்கு பராமரிப்பில் ஒப்பந்ததாரர்கள்... பழுது பார்க்காமலேயே சரியாகி விட்டதாக மோசடி

தினமலர்  தினமலர்
கோல்மால்! தெரு மின்விளக்கு பராமரிப்பில் ஒப்பந்ததாரர்கள்... பழுது பார்க்காமலேயே சரியாகி விட்டதாக மோசடி

சென்னையில், எரியாத தெரு மின் விளக்குகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது குறித்து மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தும், அதை சரி செய்யாமலேயே, சரி செய்து விட்டதாக புகார் பிரிவிற்கு ஒப்பந்ததாரர்கள் மோசடியாக தகவல் தெரிவிப்பது அம்பலமாகி உள்ளது.
சென்னை மாநகராட்சி, 2.40 லட்சம் தெரு மின் விளக்குகளை பராமரிக்கிறது. இதில், விரிவாக்க பகுதிகளில், 80 ஆயிரம் மின்விளக்குகள், எல்.இ.டி., மின் விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. மற்ற, 1.60 லட்சம் மின் விளக்குகளில் பெரும்பாலானவை, சோடியம் ஆவி விளக்குகள் மற்றும் சாதாரண மின் விளக்குகள்.எல்.இ.டி., மின் விளக்குகளை புதிதாக பொருத்தும் நிறுவனங்கள், ஏழு ஆண்டுகளுக்கு அவற்றை பராமரிக்க வேண்டும் என்பது விதி. அவ்வாறே, அந்தந்த நிறுவனங்கள் பராமரிக்கின்றன. மற்ற மின் விளக்குகளை பராமரிக்க, சென்னை மாநகராட்சியிடம் போதிய பணியாளர்கள் இல்லை. இதனால், தனியார் ஒப்பந்தங்கள் மூலம் மின் விளக்குகள் பராமரிப்பு பணி நடக்கிறது.
அலட்சியம்இந்த பராமரிப்பு பணியை மேற்கொள்ள, எல்லா மண்டலங்களிலும் ஒப்பந்தம் விடப்பட்டது. அப்போது, கவுன்சிலர்கள், வட்ட செயலர்களின் ஆதரவாளர்கள், மின் விளக்கு பராமரிப்பு பணிகளை ஒப்பந்தம் எடுத்தனர். அத்தகையவர்கள் எரியாத தெரு மின் விளக்குகளை பழுது பார்ப்பதில், படு அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பொதுவாக, சென்னை மாநகராட்சி புகார் பிரிவு போன் எண், '1913'க்கு வரும், பத்து புகார்களில், சராசரியாக, நான்கு புகார்கள் தெரு விளக்கு சம்பந்தமாகவே இருக்கும். அது போல, ஒட்டு மொத்த தெரு விளக்குகளில், 10 சதவீதம் பழுதாவதும் வாடிக்கை. பழுது ஏற்பட்டதாக புகார் பிரிவில் முன்னர் புகார் கூறினால், இரண்டு நாட்களில் புதிய விளக்கு பொருத்துதல் அல்லது பழுது சரி செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவ்வாறு சரி செய்யப்பட்ட பின், புகார் தெரிவித்தவருக்கு, பழுது சரி செய்யப்பட்டு விட்டது என, எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படும்.ஆனால், தற்போது புகார் பிரிவில் தெரிவித்தால், வாரக் கணக்கில் ஆனாலும், தெரு விளக்குகள் பழுது பார்க்கப்படுவதில்லை. ஆனால், பழுது நீக்கப்பட்டு விட்டதாக, புகார் தெரிவித்தவருக்கு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., அனுப்புகின்றனர்.
பொய் தகவல்இந்த முறைகேடு குறித்து விசாரித்தால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், புகார் பிரிவில் வரும் புகார்களை நிவர்த்தி செய்யாமல், பழுதுகள் சரி செய்யப்பட்டு விட்டதாக பொய்யாக தகவல் தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.பராமரிப்பு பணி ஒப்பந்தம் விடும் போதே, 10 முதல், 15 சதவீதம் வரை, 'கமிஷன்' வாங்குவதாக கூறப்படும் மாநகராட்சி மின் துறை அதிகாரிகள், இந்த அலட்சிய ஒப்பந்ததாரர்களின் பணிகளை கவனிப்பதும் கிடையாது; புகார் வந்தால் கண்டிப்பதும் கிடையாது. இதனால், தற்போதைக்கு தெரு மின் விளக்குகள் பராமரிப்பு என்பது, சென்னையில் பெயரளவிற்கு மட்டுமே நடக்கிறது. மேலும், வழக்கமாக பழுதை கூட, 'வர்தா' புயலில் ஏற்பட்ட பழுது என கூறும் ஒப்பந்ததாரர்கள், மின் விளக்குகளை சரி செய்யாமல் வைத்துள்ளனர்.
புகார் வீண்இது குறித்து சூளைமேட்டை சேர்ந்த நான்சி என்பவர் கூறியதாவது: அண்ணாநகர் மண்டலம், 106, 108 ஆகிய வார்டுகளில், காமராஜ் நகர், ரயில்வே காலனி, பெரியார் பாதை, அண்ணா நெடும்பாதை, நெல்சன் மாணிக்கம் சாலை, லயோலா கல்லுாரி சுரங்கப்பாதை, ஆசாத் நகர் ஆகிய பகுதிகளில், எரியாத தெரு விளக்குகள் குறித்து, '1913' புகார் பிரிவில் புகார் செய்தேன். தற்போது வரை அங்கு மின் விளக்குகள் சீரமைப்பு பணி நடைபெறவில்லை. ஆனால், புகார் பிரிவில், நான் தெரிவித்த எல்லா புகார்களும் சரி செய்து விட்டதாக பதிவு செய்துள்ளனர். சென்னை முழுவதும், தெரு விளக்கு பராமரிப்பு பணி இந்த லட்சணத்தில் தான் நடக்கிறது. மின் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 2 வாரமாக எரியவில்லைசென்னையின் மிக முக்கிய நெடுஞ்சாலையான ராஜிவ் சாலையில், பன்னாட்டு நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. இந்த சாலையில், ஒக்கியம் துரைப்பாக்கத்தில், 2 கி.மீ., நீளத்திற்கு தெரு விளக்குகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக எரியவில்லை.அது போல, பேருந்து சாலைகளிலும், உட்புற சாலைகளிலும் எரியாத தெரு விளக்குகள் எண்ணிக்கை பல ஆயிரங்கள் உண்டு. சென்னை மாநகராட்சி தெரு விளக்கு பராமரிப்பிற்கு மட்டும், ஆண்டிற்கு, 10 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடுவதாக கூறப்படுகிறது. இந்த பணியை உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்து, பராமரிப்பும் சரியில்லாமல், சில தனி நபர்கள் சம்பாதிக்க வழிவகுப்பதால், மின் துறையில் பிரபலமான நிறுவனங்களிடம், ஒட்டு மொத்தமாக ஒப்படைத்தாலோ அல்லது மாநகராட்சியே ஆட்களை நியமித்து, மின் விளக்குகளை பராமரித்தாலோ பராமரிப்பு சிறப்பாக இருக்கும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

- நமது நிருபர் -

மூலக்கதை