ஹட்கோ கடன் தொகை அனுமதி..ரத்து! சாலை விரிவாக்கப்பணிகள் 'அம்பேல்'

தினமலர்  தினமலர்
ஹட்கோ கடன் தொகை அனுமதி..ரத்து! சாலை விரிவாக்கப்பணிகள் அம்பேல்


புதுச்சேரியில் நிலம் கையகப்படுத்துதல் சட்ட வரையறை அமல்படுத்தாததால், பல்வேறு திட்டங்களுக்காக ஹட்கோ வழங்கிய கடன் தொகைக்கான அனுமதியை புதுச்சேரி அரசு ரத்து செய்துள்ளது.
புதிய நிலம் கையப்படுத்து தல், புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றச் சட்டம் 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, 2014ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதில், ஒரு நிலத்தை எப்படி கையகப்படுத்த வேண்டும், அதன் வரையறை, கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் உள்ளிட்டவை விளக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டின் இறுதியில், இச்சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.
நிலம் கையகப்படுத்தப்படுவதால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடுகளை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டோரின் மீள் குடி யேற்றத்திற்கும், புனர்வாழ்விற்குமான போதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளது. அந்தந்த மாநில அரசுகள் இச்சட்டம் தொடர்பான வரையறையை வகுத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து விட்டது.
புதுச்சேரியில் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றச் சட்டம் தொடர்பாக சட்டத்துறை வரையறைகள் தயாரித்துள்ளது. இந்த சட்ட வரையறை அமைச்சரவை முடிவிற்கு பின் கவர்னர் ஒப்புதலுடன் அரசிதழில் வெளியானால் மட்டுமே அமலாகும்.
புதுச்சேரியில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் புனர்வாழ்வு சட்ட வரையறை அமல் படுத்தாததால் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு நிலம் கையப்படுத்த முடியவில்லை. இப்பிரச்னையால், பொதுப்பணித்துறையின் புதிய திட்ட பணிகளுக்காக, ஹட்கோ மூலம் கிடைக்கப்பெற்ற பல கோடி ரூபாய் கடன் தொகைக்கான அனுமதி, கடந்த 2ம் தேதி, புதுச்சேரி அரசு ரத்து செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ரத்தான திட்டங்கள்பொதுப்பணித் துறை சார்பில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேற்படுத்த திட்டங்கள் தயாரிக்கப்படுகிறது. இதில், புதுச்சேரி நெல்லித்தோப்பு சுப்பையா சிலையில் இருந்து நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் வரை உள்ள குறுகலான நெடுஞ்சாலையை 22 மீட்டர் அகலத்திற்கு விரிவுப்படுத்த, 2015ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி ரூ. 8 கோடி கடனுக்கு ஹெட்கோ அனுமதி வழங்கியது. புதிய நிலம் எடுப்பு சட்ட வரையறை புதுச்சேரியில் அமலுக்கு வராததால், சாலை விரிவாக்கத்திற்கு போதிய நிலத்தை அரசால் பெற முடியவில்லை. இதனால், இத்திட்டதிற்காக ஹட்கோ வழங்க இருந்த கடன் தொகைக்கான அனுமதியை கடந்த 2ம் தேதி புதுச்சேரி அரசு ரத்து செய்தது.
மரப்பாலத்தில் இருந்து அரியாங்குப்பம் வரை செல்லும் கடலுார் சாலையை விரிவாக்கம் செய்ய, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ. 25.17 கோடி கடன் வழங்க ஹட்கோ அனுமதி அளித்தது. நிலம் கையப்படுத்தும் சட்ட வரையறை அமல்படுத்தாததால் இத்திட்டத்திற்கான போதிய நிலம் கையப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக, இந்த திட்டத்திற்காக வழங்கிய கடன் அனுமதியும் ரத்து செய்யப்பட்டு விட்டது.
நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில், சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக, கூடுதலாக பாரம்பரிய கட்டட வளாகம் கட்ட கடந்த ஆண்டு ஹட்கோ மூலம் 2.34 கோடி கடன் தொகைக்கு அனுமதி கிடைத்தது. அதற்கான நிலம் கையப்படுத்தாததால், இந்த திட்டத்திற்கான நிதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுபோல், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை, மத்திய கட்டடம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அனுப்பப்பட்ட பல திட்டங்களுக்கு கடன் கிடைத் தும், திட்டம் நிறைவேற்ற தேவை யான நிலம் கையப்படுத்த முடியாததால், அனுமதி கிடைத்த நிதி யும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒரு சதுர அடி நிலம் கூட கையகப்படுத்தவில்லைபுதிய நிலம் கையகப்படுத்துதல் மற்றும் புனர்வாழ்வு சட்ட வரையறை நிறைவேற்றப் படாததால், கடந்த 2 ஆண்டு களில் வருவாய்த் துறை, பொதுப்பணித்துறைகள் அரசு திட்டத்திற்காக ஒரு சதுர அடி நிலம் கூட பெற முடியவில்லை. அரசிடம் ஏற்கனவே கையிருப்பில் உள்ள அரசு இடத்தை தேடி கண்டுபிடித்து, அங்கு புதிய திட்டத்திற்கான கட்டுமான பணிகள் மட்டுமே நடந்து வருகிறது.


-நமது சிறப்பு நிருபர்-

மூலக்கதை