விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம்...கிடைக்குமா? அடங்கலில் குழப்பம் உள்ளதால் சிக்கல்

தினமலர்  தினமலர்
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம்...கிடைக்குமா? அடங்கலில் குழப்பம் உள்ளதால் சிக்கல்

கடலுார்: மாவட்டத்தில் சாகுபடி செய்த பயிர்களை வருவாய் துறையினர் அடங்கலில் சரிவர பதிவு செய்யாத காரணத்தினால், தற்போது அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விவசாயமே பிரதான தொழிலாகக் கொண்ட கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர் நோக்கி 2.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பட்டத்தில் நெல் பயிரிடப்பட்டது. இந்நிலையில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாத நிலையில், வடகிழக்கு பருவமழையாவது கை கொடுக்கும் என விவசாயிகள் நம்பினர். ஆனால், வடகிழக்கு பருவமழை காலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 89 சதவீதம் குறைவாகவே பெய்தது. தமிழகத்திலேயே வடகிழக்கு பருவமழை கடலுார் மாவட்டத்தில் தான் மிக குறைவாக பெய்ததால், நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகின. வறட்சியால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிய விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர். அவர்களில் சிலர், தற்கொலையும் செய்து கொண்டனர்.
இந்நிலையில் தமிழக அரசு, சென்னையைத் தவிர்த்து பிற 31 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்தது. அதில், நஞ்சை நில பயிர்களுக்கு ஏக்கருக்கு 5,465 ரூபாயும், மானாவாரி பயிர்களுக்கு 3,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தது. அரசு அறிவித்த இழப்பீடு தொகை குறைவாக இருந்தாலும், பயிர் காப்பீடு திட்டத்தில், இழப்பை ஓரளவு ஈடுகட்டலாம் என விவசாயிகள் நம்பினர்.
இந்நிலையில் மாவட்டத்தில் வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் இணைந்து வறட்சி பாதிப்புகள் குறித்து கள ஆய்வு செய்து வருகின்றனர். அதில், 33 சதவீதத்திற்கு குறைவாக மகசூல் இழப்பு ஏற்பட்ட பயிர்களை வறட்சி பாதித்தவையாக அறிவித்து வருகின்றனர்.அதில், காவிரி நீரை நம்பி டெல்டா பாசன பகுதியில் நேரடி நெல் விதைப்பு செய்த 62 ஆயிரம் எக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் பயிர் முற்றிலுமாக கருகியுள்ளன. அதேபோன்று ஆழ் குழாய் கிணறு மூலம் பாசனம் பெற்ற பயிர்களில் பெரும் பகுதி மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் 70 சதவீதத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில், வருவாய் துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் அடங்கலில், விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்கள் பதிவு செய்யப்படும். இதன் அடிப்படையிலேயே விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நிவாரணம் உள்ளிட்ட அனைத்து அரசு சலுகைகளும் வழங்கப்படும். ஆனால், கிராம நிர்வாக அலுவலர்கள் பணிச்சுமை காரணமாக நேரடியாக கள ஆய்வு செய்து அடங்கல் பதிவு செய்யாமல், கடந்த முறை பதிவையே புதுப்பித்து வருகின்றனர்.
அதேபோன்று விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் கூடுதல் கடன் பெறுவதற்காக வாழை உள்ளிட்ட பயிர்களை அடங்கலில் பதிவு செய்துவிட்டு, நெல் உள்ளிட்ட பிற தானியங்கள் பயிரிடுகின்றனர்.
இதுபோன்று அடங்கலில் ஒரு பயிரும், வயலில் வேறு பயிரும் உள்ளதால், அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதனால், வருவாய் துறையினர் கள ஆய்வு செய்து அடங்கலை திருத்தம் செய்திட வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை